'தொடரும் கனமழை'... 'வாட்சப்ஆப்பில் பரவிய தகவல்'... 'செம்பரம்பாக்கம் ஏரியின் நிலை என்ன'?... மாநகராட்சி விளக்கம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் கனமழை பெய்து வரும் நிலையில் செம்பரம்பாக்கம் ஏரியின் நிலை குறித்து பலவிதமான தகவல் பரவிய நிலையில், சென்னை மாநகராட்சி விளக்கமளித்துள்ளது.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் ஏரிகளில் தேக்கிவைக்கப்படும் நீரின் அளவு உயர்ந்து வருகிறது. இதனுடைய செம்பரம்பாக்கம் ஏரிக்குப் பிரதானமாகப் பூண்டி ஏரியிலிருந்து தண்ணீர் வருகிறது. ஒரு பக்கம் மழை மற்றும் பூண்டி ஏரியிலிருந்து வந்த நீர் காரணமாக 24 அடி உயரம்கொண்ட ஏரியில் தற்போது நீர்மட்டம் 21 அடிக்குமேல் உயர்ந்துள்ளது. இதனால் பூண்டி ஏரியின் வரும் நீர் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்த சூழ்நிலையில் செம்பரம்பாக்கம் ஏரியில் நீரின் அளவு உயர்ந்து விட்டதாகவும், ஏரி திறக்கப்படலாம் எனவும் பல தவறான தகவல்கள் உலா வந்த வண்ணம் இருந்தது. இந்நிலையில் செம்பரம்பாக்கம் ஏரியில் ஆய்வு மேற்கொண்ட பொதுப்பணித் துறை அதிகாரிகள், ஏரி தற்போது நிரம்ப வாய்ப்பில்லை என்றும் தொடர்ந்து கனமழை பெய்துவரும் பட்சத்தில் ஏரி நிரம்ப வாய்ப்பு இருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.
அவ்வாறு உயரும் பட்சத்தில் உடனடியாக நீரை வெளியேற்ற தாங்கள் தயாராக உள்ளதாகவும், நீர் வெளியேற்றப்படும் வழிகளில் போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்திருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே சென்னை மாநகராட்சி அதிகாரி பிரகாஷ் இது குறித்து விளக்கமளித்துள்ளார். ''செம்பரம்பாக்கம் ஏரியின் உயரம் 24 அடியாக உள்நிலையில், தற்போது நீர்மட்டம் 21.6ஆகப் பதிவாகியுள்ளது. தலைமைச் செயலர், பொதுப்பணித் துறைச் செயலர் மற்றும் சுகாதாரத் துறைச் செயலர் அனைவரும் கலந்து பேசியுள்ளோம். வெள்ளப்பெருக்கு காலங்களில் சமாளிப்பதற்கும், மக்களின் குடிநீர்த் தேவைகளையும் கருத்தில்கொண்டு, நீர்மட்டம் 22 அடியைத் தொட்டவுடன், குறைவான அளவில் நீரைத் திறந்துவிடக் கலந்தாலோசித்துள்ளோம்.
இதுகுறித்து பொதுப்பணித் துறை பொறியாளர்கள் மற்றும் ஊழியர்களிடம் பேசிவிட்டுத் தகுந்த முடிவை எடுப்பதாக பொதுப்பணித் துறைச் செயலர் கூறியுள்ளார். அனைத்து வகையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதால், ஏரிக்கரையோரம் வசிக்கும் மக்கள் அச்சப்படத் தேவையில்லை’’ என்று கூறியுள்ளார்.