‘ஜீவ சமாதி அடையப் போறேன்னு’... ‘நள்ளிரவில் தொற்றிய பரபரப்பு’... ‘காத்திருந்த பக்தர்கள், போலீஸ்’... ‘கடைசி நிமிடத்தில் நடந்த திருப்பம்’!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Sep 13, 2019 09:43 AM

ஜீவ சமாதி அடையப் போவதாக அறிவித்த சாமியார் இருளப்ப சாமி, கடைசி நேரத்தில் தனது முடிவை மாற்றிக்கொண்டார்.

irulappa swamy postponed his jeeva samadhi in sivagangai

சிவகங்கை மாவட்டம் சக்கந்தி அருகே உள்ள பாசாங்கரை கிராமத்தைச் சேர்ந்தவர் இருளப்பசாமி. 80 வயதுடைய இவர், சிறுவயதிலிருந்தே சிவ பக்தர். தனது குடும்பத்துடன் இக் கிராமத்தில் வசித்து வருகிறார். சாமியாராக உள்ளூரில் பெயரெடுத்த இவர், ஜீவசமாதி அடையப் போவதாக அறிவித்தார். இந்த செய்தி தீயாக பரவியதால் ஏராளமான பக்தர்கள் ஆசிபெற்றுச் சென்றனர். இந்நிலையில் தேர்வு செய்த இடத்தில் இருளப்ப சாமியார், ஜீவசமாதியை அடைய குழி வெட்டி பூஜைகள், மலர் அலங்காரம், பந்தல் அமைத்தல் போன்றவை மேற்கொள்ளப்பட்டன.

அவரை காண்பதற்காக, ஐந்து ஆயிரத்திற்கும் அதிகமானோர் திரண்டதால் நள்ளிரவில், அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. பொதுமக்கள் முன்னிலையில் அமர்ந்த சாமியார் இருளப்பசாமி, நள்ளிரவு 12 மணியில் இருந்து காலை 5 மணிக்குள் தனது உயிர் பிரிந்துவிடும் என்று அறிவித்தார். பக்தி பாடல்கள் ஒலிக்க விடிய விடிய பூஜைகள் நடத்தப்பட்டு இறுதிச்சடங்குக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அங்கு வந்த வருவாய்த்துறை அதிகாரிகள், காவல்துறையினர் நிலைமையை கண்காணித்து வந்தனர்.

சுமார் 7 முறை நடைப்பெற்ற மருத்துவப் பரிசோதனையில், சாமியாரின் உடல்நிலை சீராக இருப்பது தெரிய வந்தது. ஜீவசமாதிக்கான காலக்கெடு முடிவடைந்த நிலையில், கடைசி நிமிடத்தில் சமாதி முடிவை ஒத்தி வைப்பதாக இன்று காலை சுமார் 5.45 மணிக்கு அறிவித்தார் இருளப்பசாமி. இதுகுறித்து அவர் கூறுகையில், ‘நேரம் தவறியதால் தற்போது ஜீவ சமாதி அடையமுடியவில்லை. 2045-ல் அதே இடத்தில் ஜீவ சமாதி அடைவேன். அதுவரை தவம் மேற்கொள்வேன்’ என்றார். இதையடுத்து இரவெல்லாம் அங்கு திரண்டிருந்த பக்தர்கள் கலைந்து சென்றனர். அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் இருக்க அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Tags : #JEEVASAMADHI #SIVAGANGAI