பெட்ரோல், டீசல் தேவையில்லை... காற்று மாசுபாடும் கிடையாது.. பயன்பாட்டுக்கு வரும் சூப்பர் பஸ்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்திருப்பூரில் இயற்கை எரிவாயு மூலமாக இயங்கும் பேருந்து அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இது பொது மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் எரிபொருளின் விலை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. கொரோனா காலம் தொட்டே போக்குவரத்து சார்ந்த துறைகள் பலவும் பெரும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றன. இதுஒரு பக்கம் என்றால் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த எச்சரிக்கைகளை உலக நாடுகள் தொடர்ந்து அளித்து வருகின்றன. இந்நிலையில், சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காத மாற்று எரிபொருளுக்கு பல நாடுகள் மாறிவருகின்றன. இந்நிலையில், திருப்பூரில் CNG மூலமாக இயங்கும் பேருந்து மக்கள் பயன்பாட்டுக்கு வர இருக்கிறது.
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை சேர்ந்தவர் கோகுல்நாத். கடந்த 25 ஆண்டுகளாக இவரது குடும்பத்தினர் பேருந்து போக்குவரத்து சேவையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், இவர் தனியார் நிறுவனத்தின் உதவியுடன் தங்களுக்கு சொந்தமான பேருந்து ஒன்றில் CNG டேங்குகளை பொருத்தியிருக்கிறார். டீசலுக்கு பதிலாக CNG ஐ பயன்படுத்துவதால் செலவு குறைவதோடு, சுற்றுச்சூழல் பாதிப்பும் குறையும் என்கிறார் பேருந்து உரிமையாளரான கோகுல்நாத்.
இதுபற்றி அவர் பேசுகையில்,"தமிழகத்தில் பொதுப்போக்குவரத்தில் CNG பேருந்தை நாங்கள் அறிமுகப்படுத்த இருக்கிறோம். டீசலை விட இதில் விலை மற்றும் பராமரிப்பு ஆகியவை குறைவு. இன்றைய டீசலின் விலை 94 ரூபாயாக இருக்கிறது. அதுவே CNG 82 ரூபாய் தான். அதேபோல டீசலுடன் ஒப்பிடும்போது CNG ஐ பயன்படுத்தினால் மைலேஜில் ஒரு கிலோமீட்டர் அதிகமாக கிடைக்கும். ஆகவே நாங்கள் இந்த வகை பேருந்தை இயக்க முடிவு செய்தோம்" என்றார்.
கோகுல்நாத் இந்த பேருந்தை 38 லட்ச ரூபாய்க்கு வாங்கியிருக்கிறார். இந்த பேருந்தை பல்லடத்தில் இருந்து புளியம்பட்டிக்கு இயக்க அனுமதி பெறப்பட்டிருக்கிறது. காற்று மாசுபாடு இல்லாத வகையில் இயங்கும் இந்த பேருந்து விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு வர இருக்கிறது. இதனால் உள்ளூர் மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

மற்ற செய்திகள்
