படிப்பு முக்கியம் பிகிலு.. அரக்கப்பறக்க மணக்கோலத்தில் தேர்வறைக்கு ஓடி வந்த மணமக்கள்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்ஈரோடு அருகே திருமணத்தன்று நடைபெற்ற அரசு தேர்வில் புதுமண தம்பதிகள் தேர்வு எழுதியிருக்கின்றனர்.
பொதுவாகவே படித்து முடித்த பின்னர் ஒரு அரசு வேலைக்கு சென்று விட வேண்டும் என்பது பல பட்டதாரிகளின் கனவாக இருந்து வருகிறது. சமீப ஆண்டுகளில் அரசு தேர்வுகளில் போட்டியிடும் பட்டதாரிகளின் எண்ணிக்கையும் லட்சங்களில் தான் இருக்கிறது. ஆனாலும் விடாமுயற்சியும் பயிற்சியும் கொண்டவர்கள் தங்களது இத்தகைய தேர்வுகளில் வென்று சாதனை படைத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். தேர்விற்கு தயாராகி வருபவர்கள் எவ்வித காரணத்திற்காகவும் அதனை விட்டுக்கொடுப்பது கிடையாது. அந்த வகையில் திருமணம் முடித்த கையோடு அரசு தேர்வை எழுதியிருக்கிறார்கள் புதுமண தம்பதிகள்.
ஈரோடு மாவட்டம் பவானி அருகே மேட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ஹரிணி. பிகாம் பட்டதாரியான ஹரிணி அரசு தேர்வுகளுக்கு தயாராகி வந்திருக்கிறார். இதனிடையே அவருக்கும் வினோத் குமார் என்பவருக்கும் திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. ஆனால், அதே தேதியில் கிராம நிர்வாக அலுவலருக்கான தேர்வும் இருந்ததால் மணமகள் ஹரிணி கலக்கமடைந்தார். இருப்பினும், தேர்வு எழுத நிச்சயம் அனுமதிப்பதாக வீட்டினர் மற்றும் மணமகன் உறுதியளித்த நிலையில் நிச்சயிக்கப்பட்டபடி திருமணம் நடைபெற்றிருக்கிறது.
மேட்டுப்பாளையம் அருகே உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்ற தேர்வுக்கு மணக் கோலத்திலேயே ஹரிணியை அழைத்துச் சென்றிருக்கிறார் மாப்பிள்ளை வினோத் குமார். அங்கிருந்த அதிகாரிகள் இருவரையும் கண்டதும் ஆச்சர்யமடைந்திருக்கின்றனர். இதனையடுத்து இருவரும் தேர்வு எழுதியிருக்கின்றனர். திருமண கோலத்தில் மாப்பிள்ளையும் மணமகளும் அரசு தேர்வு எழுத வந்தது அங்கிருந்த அனைவரையும் நெகிழ்ச்சியடைய செய்தது.
இதேபோல, சங்க மித்ரா என்ற பெண்ணும் திருமணம் முடிந்த கையோடு மணக் கோலத்தில் தேர்வு எழுத வந்திருக்கிறார். ஆனால், அவர் கால தாமதமாக வந்ததால் அவரை தேர்வு எழுத அதிகாரிகள் அனுமதிக்கவில்லை. இதனால் அவர் வருத்ததுடன் திரும்பிச் சென்றார்.