வரதட்சணையாக கிடைத்த கார்.. கல்யாணம் பண்ண கையோட மாப்பிள்ளை செஞ்ச விஷயம்.. சோகத்தில் மூழ்கிய திருமண வீடு..!
முகப்பு > செய்திகள் > இந்தியாஉத்திர பிரதேச மாநிலத்தில் திருமண மாப்பிள்ளை சென்ற கார் மோதி பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
உத்திர பிரதேச மாநிலத்தில் எட்டாவா பகுதியில் உள்ளது அக்பர்பூர் கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்த அருண் குமார் என்பவருக்கும் அதே பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கும் சமீபத்தில் திருமணம் நடைபெற்றிருக்கிறது. இந்த திருமணத்தில் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
இந்நிலையில், திருமணத்திற்காக மணமக்களுக்கு கார் ஒன்றை பரிசாக கொடுத்திருக்கிறார்கள் மணப்பெண் வீட்டார். இந்த காரை ஓட்ட நினைத்த மாப்பிள்ளை அருண், தனது மனைவியுடன் காரில் ஏறியிருக்கிறார். இதனை அருகில் இருந்த உறவினர்கள் ஆர்வத்துடன் பார்த்துக்கொண்டு நின்றிருந்திருக்கிறார்கள். இதனிடையே காரை மாப்பிள்ளை ஓட்ட, திடீரென கார் கட்டுப்பாட்டை இழந்ததாக சொல்லப்படுகிறது.
இதில் அங்கே நின்றுகொண்டிருந்த அருண் குமாரின் அத்தையான சரளா தேவி (34) என்னும் பெண்மீது கார் மோதியதாக தெரிகிறது. இதனால் பதறிப்போன உறவினர்கள் அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருக்கின்றனர். அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்ட சரளா தேவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருக்கிறார். இதனையடுத்து இதுகுறித்து தகவல் அறிந்த எக்டில் பகுதி காவல்நிலைய அதிகாரிகள் சரளா தேவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பியுள்ளனர். மேலும், மாப்பிள்ளை அருண்குமாரை காவல்துறையினர் காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே, அருண்குமாருக்கு கார் ஓட்டத் தெரியாது எனவும் சொல்லப்படுகிறது. மேலும், வாகனம் ஓட்டும்போது பிரேக்கை அழுத்துவதற்கு பதிலாக ஆக்சிலேட்டரை அருண்குமார் அழுத்தியதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
இதுபற்றி பேசிய எக்டில் காவல்நிலைய அதிகாரி ரன்விஜய் சிங், "குற்றம் சாட்டப்பட்டவர்களை காவலில் எடுத்து விசாரணை நடத்திவருகிறோம். புகார் கிடைத்தவுடன், கவனக்குறைவு, அதிவேகமாக வாகனம் ஓட்டுதல் மற்றும் பிற குற்றங்களால் மரணம் விளைவித்ததாக குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது வழக்கு பதிவுசெய்யப்படும்" என்றார். இந்த சம்பவம் உள்ளூர் மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.