‘ஆளுங்கட்சியினர் ரூ.2000 நோட்டு கொடுக்கும் வீடியோக்கள்.. ஏன் நடவடிக்கை இல்லை?’ ஸ்டாலின் அதிரடி கேள்வி!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | Apr 16, 2019 11:42 PM

தூத்துக்குடியில் உள்ள குறிஞ்சி நகரில் திமுக சார்பில் நாடளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் கனிமொழி தங்கியிருந்த வீட்டில் வருமான வரியினர் சோதனை நிகழ்த்தியது நேற்றைய தினம் பரபரப்பை ஏற்படுத்தியது.

\'Modi is using EC\', MK Stalin on IT raids on Kanimozhi

பாஜகவின் சார்பாக தமிழிசை சவுந்தர்ராஜன் போட்டியிடும் அதே தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் கனிமொழி இன்று தீவிர பிரச்சாரத்தை மேற்கொண்ட நிலையில், மாலை 6 மணிக்கு மேல் அவரது இல்லம் மற்றும் அலுவலகங்களில் 10க்கும் மேற்பட்ட ஐடி அதிகாரிகள் வருமான வரிசோதனையை சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக நிகழ்த்தினர்.

ஆனாலும் இந்த சோதனையில் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை என்பதால் சோதனை முடிவுக்கு வந்தது. இந்த நிலையில் இதுபற்றி கண்டனம் தெரிவித்துள்ள மு.க.ஸ்டாலின், தேர்தல் ஆணையம் யாரை திருப்திபடுத்துவதற்கு தூத்துக்குடியில் ரெய்டு  நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்று கேள்வி எழுப்பினார். 

மேலும் கோடி கோடியாக பணம் வைத்திருக்கும் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் வீட்டில் எல்லாம் ரெய்டு நடக்கவில்லை என்று குற்றம் சாட்டிய ஸ்டாலின், ஐடி, சிபிசிஐடி உள்ளிட்டவற்றை பயன்படுத்திய பாஜக தற்போது தேர்தல் ஆணையத்தையும் இதற்கென பயன்படுத்திக்கொள்வதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

இந்த நிலையில் தற்போது பேசியுள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், ‘ஆளுங்கட்சியினர் வாக்காளர்களுக்கு 2000 ரூபாய் நோட்டுகளை வழங்குவது தொடர்பாக வீடியோக்கள் எல்லாம் வெளியாகியுள்ளன; ஆனால் அதன் மீதெல்லாம் ஏன் நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை’ என்று  கேள்வி எழுப்பியுள்ளார்.