"எடுத்தவங்க தயவுசெஞ்சு கொடுத்திடுங்க".. பழனி கோவிலில் ராணுவ ரகசியத்தை தவறவிட்ட வீரர்.. !
முகப்பு > செய்திகள் > தமிழகம்பழனியில் ராணுவ ஆவணங்களை தொலைத்த வீரர் ஒருவர், யாரேனும் அதனை எடுத்திருந்தால் அதை காவல்த்துறையில் ஒப்படைக்கும்படி தெரிவித்திருக்கிறார். கவலையுடன் அவர் பேசும் வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் பலராலும் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.

தொலைந்துபோன பர்ஸ்
திண்டுக்கல் மாவட்டதின் பழனியில் அமைந்துள்ளது அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோவில். தமிழகம் மட்டும் அல்லாது, அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா உள்ளிட்ட இடங்களில் இருந்தும் பக்தர்கள் வருவது வழக்கம். இந்நிலையில் தான் கேரளாவை சேர்ந்த ராணுவ வீரர் ஒருவர் பழனி கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்திருக்கிறார். அப்போது தனது பர்ஸை தொலைத்துவிட்டதாகவும், அதில் ராணுவ ஆவணங்கள் இருப்பதாகவும் ஆகவே அதனை யாராவது எடுத்திருந்தால் உடனடியாக காவல்துறையில் ஒப்படைக்கும்படியும் வீடியோ வெளியிட்டிருக்கிறார் அவர். அந்த வீடியோவில் பர்சில் இருக்கும் பணத்தைக்கூட நீங்களே எடுத்துக்கொள்ளுங்கள் என்றும் அதில் உள்ள ராணுவ ஆவணங்களை மட்டும் காவல்துறையில் ஒப்படைத்துவிடுங்கள் எனவும் அவர் உருக்கமாக குறிப்பிட்டிருக்கிறார்.
ராணுவ ஆவணங்கள்
கேரளாவை சேர்ந்த ராணுவ வீரர் மனோ. இவர் பழனியில் சாமி தரிசனம் செய்ய சென்றிருந்தபோது அவரது பர்ஸ் காணாமல் போயிருக்கிறது. தீவிரமாக தேடியும் அவரால் தனது பர்ஸை கண்டுபிடிக்க முடியாமல் போயிருக்கிறது. இது குறித்து பழனி அடிவாரம் காவல் நிலையத்தில் மனோ புகார் அளிக்க சென்ற போது, அடிவாரம் பகுதியில் வைக்கப்பட்டுள்ள சிசிடிவி காமிராக்கள் செயல்படுவதில்லை என்றும், எனவே காணாமல் போனதை கண்டுபிடிப்பதில் சிரமம் உள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்ததாக தெரிகிறது.
இந்நிலையில், ராணுவ வீரர் மனோ வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அந்த வீடியோவில்,"பழனி கோவிலில் எனது பர்ஸ் தொலைந்துவிட்டது. யாருடைய கையிலாவது அது கிடைத்திருந்தால் அதனை போலீசிடம் ஒப்படையுங்கள். அதில் ராணுவம் சம்பந்தமான சில முக்கிய ஆவணங்கள் இருக்கிறது. பணமும் இருக்கிறது. பணத்தை நீங்களே வைத்துக்கொள்ளுங்கள். ஆனால் அதில் இருக்கும் ராணுவ ஆவணங்கள் முக்கியம். எனவே பர்ஸை காவல்துறையில் ஒப்படைத்துவிடுங்கள்" எனக் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில், இந்த வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

மற்ற செய்திகள்
