'மீண்டும் அதிமுக ஆட்சி'... 'மீண்டும் புதிதாய் பிறக்கப் போகும் மாவட்டம்'... அடுத்த அதிரடியை கொடுத்த முதல்வர்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்தவுடன் புதிய மாவட்டம் உருவாக்கப்படும் என முதல்வர் தெரிவித்துள்ளார்.
தீவிர சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள முதல்வர், அதிமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்து வருகிறார். அந்த வகையில் கரூர் மாவட்டத்தில் தனது 3வது கட்ட தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கிய முதல்வர், அ.தி.மு.க. வேட்பாளர் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கரை ஆதரித்து கரூர் பேருந்து நிலையம் மனோகரா ரவுண்டானாவில் பிரசாரம் செய்தார்.
அப்போது பேசிய முதல்வர், ''கரூர் சட்டமன்றத் தொகுதி மக்களின் கோரிக்கை மற்றும் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கரின் கோரிக்கையால் ரூ.306 கோடியில் 150 மாணவ, மாணவிகள் படிக்க கூடிய ஆயிரம் படுக்கை வசதிகள் கொண்ட கரூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையைப் பிரமாண்டமாகக் கட்டி முடித்திருக்கிறோம். அ.தி.மு.க. ஆட்சியில் எதுவும் நடக்கவில்லை என்று ஸ்டாலின் சொல்கிறார்.
இந்த மருத்துவக்கல்லூரியைப் பிரமாண்டமாகக் கட்டி திறந்துவைத்த அரசு அம்மாவின் அ.தி.மு.க. அரசு. கரூரில் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கச் சேலம் புறவழிச்சாலையை இணைக்கும் அம்மா சாலை ரூ.21 கோடியில் நிறைவேற்றப்பட்டுள்ளது. பெரியகுளத்துப்பாளையம், பசுபதி பாளையம் போன்ற இடங்களில் குகை வழிப் பாதைகள் ரூ.11 கோடியில் அமைக்கப்பட்டது.
கரூர் மாவட்டத்தில் குடிநீர் பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட்டது. ரூ.6 கோடி மதிப்பில் ரெட்டை வாய்க்கால் பகுதியில் பணிகள் நடந்து வருகிறது. ரூ.9.3 கோடியில் குப்பைகளைத் தரம் பிரிக்கும் பணி நடந்து வருகிறது. கரூர் தொழில் நிறைந்த நகரம். அதற்குத் தடையில்லா மின்சாரம் அம்மா அரசு வழங்கி வருகிறது.
மேலும் சென்னையில் எனது தலைமையில் ரூ.3 லட்சத்து 500 கோடியில் 304 தொழில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் முடியும் தறுவாயில் நேரடியாக 5 லட்சம் இளைஞர்களுக்கும், மறைமுகமாக 5 லட்சம் இளைஞர்களுக்கும் என 10 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்'' என முதல்வர் பேசினார்.
இந்நிலையில் தமிழ்நாட்டில் மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்தவுடன் தமிழ் கடவுள் முருகப்பெருமான் குடிகொண்டுள்ள பழனியைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்படும் என முதல்வர் அதிரடியாகத் தெரிவித்துள்ளார்.