‘அவர ஊருக்குள்ள வர அனுமதிக்க மாட்டோம்’.. கொரோனா சிகிச்சை முடிந்து ‘வீடு’ திரும்பியவருக்கு நேர்ந்த சோகம்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கொரோனா சிகிச்சையில் குணமடைந்து வீடு திரும்பியவரை அப்பகுதி மக்கள் ஊருக்குள் வர எதிர்ப்பு தெரிவித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் 5 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இதனை அடுத்து அவர்கள் வசிக்கும் வீடுகளை சுற்றியுள்ள பகுதிகள் முழுவதும் தனிமைப் படுத்தப்பட்டது. இந்த நிலையில் பழனி அண்ணாநகர் பகுதியில் ஒருவர் கொரோனா பாதிக்கப்பட்டு கரூரில் சிகிச்சை பெற்று வந்தார். தற்போது சிகிச்சை முடிந்து மீண்டும் வீடு திரும்பியுள்ளார்.
இந்த தகவலை அறிந்த அண்ணாநகர் பகுதியை சேர்ந்த சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஒன்றுதிரண்டு, சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய நபர் அப்பகுதிக்கு வர எதிர்ப்பு தெரிவித்தனர். தகவலறிந்து வந்த மருத்துவர்கள், வருவாய்துறையினர் மற்றும் போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனாலும் பொதுமக்கள் அந்த நபர் ஊருக்குள் வர தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனை அடுத்து கொரோனாவில் இருந்து குணமடைந்த நபரை பழனி அரசு மருத்துவமனையில் வைத்து கொள்வதாக அதிகாரிகள் உறுதியளித்ததை அடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். கொரோனா சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய நபரை பொதுமக்கள் ஊருக்குள் வர எதிர்ப்பு தெரிவித்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.