'இவங்க இரண்டு பேரில் ஒருவரா'?... 'எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள தலைவர் பதவி'... ரேஸில் முந்தப்போவது யார்?
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழக பாஜக தலைவராக யார் நியமிக்கப்படுவார் என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரத்தில் ஏற்பட்டுள்ளது.
தமிழக பாஜக தலைவராக எல்.முருகன் பணியாற்றி வந்தநிலையில் அவருக்கு, மத்திய இணை அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. அவருக்குத் தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை, மீன்வளம், கால்நடைத்துறை மற்றும் பால்வளத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனிடையே பாரதிய ஜனதா கட்சியைப் பொறுத்தவரையில் ஒருவருக்கு ஒரு பொறுப்பு என்ற கொள்கையின் அடிப்படையில் செயல்பட்டு வருகிறது.
எனவே தற்போது மத்திய அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள எல்.முருகன், தமிழகத் தலைவர் பதவியிலிருந்து விரைவில் விலகுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை அடுத்து பாரதிய ஜனதா கட்சியின் தமிழக தலைவராக யார் நியமிக்கப்படுவார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
தலைவர் பதவிக்கு நெல்லை தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக உள்ள நயினார் நாகேந்திரன் அல்லது அண்ணாமலை ஆகிய இருவரில் ஒருவருக்கு வாய்ப்பு அதிகம் என்று கூறப்படுகிறது. பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் பொறுப்புக்கு வருபவர் ஐந்து ஆண்டுகள் கட்சியில் உறுப்பினராக இருந்திருப்பது அவசியம்.
அந்த அடிப்படையிலும், மாநில அமைச்சராகப் பதவி வகித்த அனுபவம் உடையவர், நீண்ட கால அரசியல் அனுபவம் உடையவர் என்ற அடிப்படையில் நயினார் நாகேந்திரன் தலைவராக நியமிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக ஒரு கருத்து நிலவி வருகிறது.
இருப்பினும் கட்சியின் அகில இந்தியத் தலைமை என்ன முடிவு எடுக்கிறது என்பதை தற்போதே கணிக்க இயலாது என்பதே அரசியல் நோக்கர்களின் கருத்தாக உள்ளது.