‘நான் ரொம்ப மன உளைச்சலில் இருக்கேன்’!.. கன்னியாகுமரியை அதிர வைத்த ‘திருமணம் ஆகாத வாலிபர்கள்’ போஸ்டர்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்திருமண வரன்களை முடக்குவதாக கூறி வியாபாரி ஒருவருக்கு எதிராக இளைஞர்கள் சிலர் போஸ்டர் ஒட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே திருமண வரன் சம்பந்தமாக பெண் வீட்டார் இளைஞர்களின் சொந்த ஊரில் விசாரிக்க வந்துள்ளர். அப்போது சிலர் இளைஞர்கள் குறித்து புறம்பேசி வரன்களை தடுத்து வருவதாக அப்பகுதி இளைஞர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
அந்த வகையில் அயினி விளை, பிச்சன் விளை பகுதி இளைஞர்கள், அப்பகுதி பலசரக்கு கடை வியாபாரி ஒருவருக்கு எதிராக போஸ்டர் ஒட்டியுள்ளனர். அதில், சம்பந்தப்பட்ட வியாபாரியின் புகைப்படத்தைப் பதிவிட்டு, அவரது பெயருக்கு மேலே ‘திருமணம் விலக்குவோர் சங்கத் தலைவர்’ என்றும், தொழில், ‘திருமண வரன் தடுத்தல்’ என்றும் பதிவிட்டுள்ளனர். இதற்கு அருகே, ‘வருகின்ற திருமண சம்பந்தங்களை முடக்குகின்ற அனைத்து நல் உள்ளங்களுக்கும், திருமணம் ஆகாத வாலிபர்கள் சார்பாக மனமார்ந்த நன்றிகள்’ என்ற வாசகங்கள் அடங்கிய போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.
இந்த போஸ்டர் விவகாரம் தொடர்பாக சம்பந்தப்பட்ட பலசரக்கு வியாபாரி கூறுகையில், ‘நான் 50 வருடங்களுக்கு மேலாக இப்பகுதியில் பலசரக்குக் கடை நடத்தி வருகிறேன். என் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் உள் நோக்கத்தோடு சில வாலிபர்கள் இந்த செயலை செய்துள்ளனர். இதனால் நான் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளேன்.
இதுதொடர்பாக கருங்கல் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளேன். அவர்கள் மீது மான நஷ்ட வழக்கும் தொடர இருக்கிறேன்’ என அவர் தெரிவித்துள்ளார். திருமண வரன்களை தடுப்பதாக வியாபாரிக்கு எதிராக இளைஞர்கள் போஸ்டர் ஒட்டிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.