ஒரு பெண் உள்பட 162 இளைஞர்கள்.. மதுபோதையில் நடுஇரவில் ரகளை.. போலீஸை உறைய வைத்த பொள்ளாச்சி சொகுசு விடுதி!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | May 04, 2019 03:28 PM

பொள்ளாச்சி அருகே சேத்துமடையில் உள்ள சொகுசு விடுதியில், ஒரு பெண் உள்பட 163 கல்லூரி மாணவர்கள், விதவிதமான போதைப் பொருட்களுடன் விடிய விடிய  ஆட்டம்  போட்டு ரகளையில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.

above 160 students has been arrested for using liquor and ganja

பொள்ளாச்சியை அடுத்த சேத்துமடை அண்ணாநகர் பகுதியில், கணேஷ் என்பவர் தனது தோட்டத்தில்,சொகுசு விடுதி ஒன்று நடத்தி வருகிறார். நேற்றிரவு விடுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் விதவிதமான போதை பொருட்களை உட்கொண்டுவிட்டு பெரும் ரகளையில் ஈடுபட்டிருக்கின்றனர்.

இந்தத்  தகவல் அறிந்த அப்பகுதி மக்கள் சிலர், இதுகுறித்து ஆனைமலை போலீஸாருக்குத் தகவல் அளித்தனர். இதையடுத்து, உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்த ஆனைமலை போலீஸார், அங்கு நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் இருந்த போதை நிலையைக் கண்டு அதிர்ந்து போனார்கள். அவர்கள் உடனடியாக கோவை எஸ்.பி சுஜித்குமாருக்கு தகவல் அளித்தனர்.

விஷயத்தின் தீவிரத்தை உணர்ந்த எஸ்.பி உடனடியாக தனது தலைமையில் ஒரு குழுவை அழைத்துக்கொண்டு இரவே சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளார். அத்துமீறலில் ஈடுபட்ட இளைஞர்களை ஆனைமலை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். அதில் மாணவர்கள் அனைவரும் கோவையில் உள்ள வெவ்வேறு கல்லூரியில் படிக்கும், வசதிபடைத்த குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்கள் என்று கூறப்படுகிறது.

இவர்களில் பலர் கேரளாவைச் சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்துள்ளது. நண்பருக்கு பிறந்த நாள் என்பதால் இணையதளம் மூலம் நண்பர்களை தொடர்பு கொண்டு பிறந்த நாள் கொண்டாட குழுமியுள்ளனர். இவர்களது சொகுசு கார்கள் மற்றும் விலை உயர்ந்த இருசக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். தோட்டத்து உரிமையாளர் கணேஷ் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ள நிலையில், சொகுசு விடுதி உரிமையாளரை போலீசார் தேடி வருகின்றனர்.

மாணவர்களுக்கு எப்படி இவ்வளவு  போதை பொருட்கள் கிடைத்தது என்பதுதான் காவல்துறையை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இவர்கள் எவ்வளவு நாள்களாக இங்கு வருகிறார்கள், இதன் பின்னணியில் வேறு ஏதாவது குற்றங்கள் நடக்கிறதா என்கிற கோணத்திலெல்லாம் விசாரணை நடைபெற்று வருகிறது.

Tags : #POLLACHI #DRUGS #ARRESTED