எலும்புக்கூடான இளம்பெண்... 20 கிலோ மட்டுமே எடை.... வரசட்சணையால் நிகழ்ந்த சோகம்!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Sangeetha | Mar 31, 2019 02:39 PM

வரதட்சணைக் கேட்டு பெண் ஒருவரை பட்டினி போட்டு, அவரது கணவர் மற்றும் மாமியார் கொலை செய்த சம்பவம்  கேரளாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

kerala young woman starved to death for dowry

கேரள மாநிலம் கொல்லம் அருகே கருநாகப்பள்ளி என்ற இடத்தில் துஷரா என்ற இளம்பெண் வாழ்ந்து வந்துள்ளார். இவருக்கு கடந்த 2013-ம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது. திருமணத்தின் போதே மாப்பிள்ளை வீட்டார் பணம், நகை என வரதட்சணைக்  கேட்டுள்ளனர். 20 சவரன் நகை மட்டுமே கொடுத்துள்ள பெண் வீட்டார், 'திருமணம் முடிந்தப் பின்பு 2 லட்சம் தருவதாகக்' கூறியுள்ளனர். ஆனால் சொன்னபடி உடனடியாக வரதட்சணைப் பணம் தராமல் பெண் வீட்டார் இருந்ததாகத் தெரிகிறது.

இந்நிலையில் மேலும் வரதட்சணைக் கேட்டு துஷராவின் கணவர் மற்றும் அவரது மாமியார்,  துஷராவை வீட்டில் அடைத்து வைத்து, கடந்த 5 வருடங்களாக கொடுமைப்படுத்தி வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. உணவு எதுவும் கொடுக்காமல், தண்ணீர் மட்டுமே கொடுத்து வந்துள்ளதாகவும் தெரிகிறது. இதனால், துஷராவின் எடை 20 கிலோவாக குறைந்து, கடந்த 21-ம் தேதி மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. பயந்துபோன கணவர் மற்றும் அவரது மாமியார், துஷராவை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி துஷரா உயிரிழந்தார்.

சந்தேகத்தின் பேரில், மருத்துவமனை அளித்தப் புகாரால், போலீஸார் விசாரணை நடத்தினர்.  அதில் இளம் பெண்ணான துஷராவை, வரதட்சணைக் கேட்டு கொடுமைப்படுத்தியது தெரிய வந்துள்ளது. இதையடுத்து இளம்பெண்ணின் கணவர் மற்றும் அவரது தாயரை கடந்த வெள்ளிக்கிழமையன்று போலீஸார் கைது செய்தனர்.

இதுகுறித்து உயிரிழந்த துஷராவின் தாயார் போலீஸாரிடம், 'எனது மகளை கடந்த ஒருவருடமாக,  அவர்கள் பார்க்கக்கூட அனுமதிக்கவில்லை. வரதட்சணைக் கேட்டு என்னுடைய மகளை கொடுமைப்படுத்தினார்கள். மகளின் வாழ்க்கையை எண்ணி புகார் கொடுக்காமல் விட்டுவிட்டோம்' என்று கூறியுள்ளார் . இந்த சம்பவம் கேரளாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #KERALA #WOMAN #DOWRY #MURDER #WEIGHED #SKELETON #HELD #ARRESTED