'சென்னை' டூ உடுமலை பயணித்த.... 81 வயது முதியவருக்கு கொரோனா அறிகுறி... விடிய,விடிய 'சல்லடை' போட்டு தேடி ஆம்புலன்ஸில் அழைத்து சென்ற அதிகாரிகள்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னையில் இருந்து உடுமலை சென்ற 81 வயது முதியவருக்கு கொரோனா அறிகுறி இருந்ததை அடுத்து அவரை விடிய,விடிய தேடி அழைத்து சென்றுள்ளனர்.
சென்னையில் தொடர்ந்து கொரோனா அதிகரித்து வருவதால் இங்கிருந்து பிற மாவட்டங்களுக்கு செல்லும் நபர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. அந்த வகையில் சென்னையில் இருந்து உடுமலைக்கு 81 வயது முதியவர் ஒருவர் கடந்த 12-ம் தேதி வந்துள்ளார். அவருக்கு கோவையில் சளி, ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டது. அப்போது அவரிடம் சுகாதாரத்துறையினர் வீட்டில் தனிமைபடுத்திக் கொள்ளுங்கள் என்று அறிவுரை வழங்கியதாக கூறப்படுகிறது.
இதையடுத்து அவர் கோவையில் இருந்து உடுமலைக்கு சென்று விட்டார். பரிசோதனை முடிவில் அவருக்கு கொரோனா அறிகுறிகள் இருந்தது தெரிய வந்தது. தொடர்ந்து அவரை அழைத்து செல்வதற்காக ஆம்புலன்ஸ் வந்துள்ளது. ஆனால் அவரது செல்லுக்கு இணைப்பு கிடைக்கவில்லை. இதையடுத்து விடிய,விடிய அவரை தேடிய ஆம்புலன்ஸ் ஊழியர்கள் அதிகாலையில் அவரை கண்டுபிடித்து ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
இதைத்தொடர்ந்து அந்த குடியிருப்பு பகுதியில் உள்ள சுமார் 120 வீடுகளிலும், சாலைகளிலும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. அந்த பகுதியில் தடுப்புகள் வைத்து அடைத்து அந்த பகுதி தனிமை படுத்தப்பட்டுள்ளது. மேலும் போலீசாரும் அந்த குடியிருப்பு பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.