“சென்னையில் கொரோனாவால் இறந்த 236 பேரின் மரணம் மறைக்கப்பட்டிருக்கு!”.. “மக்களை எத்தனை நாளைக்கு ஏமாத்தப் போறீங்க?” - மு.க.ஸ்டாலின் 'சரமாரி' கேள்வி!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னையில் கொரோனாவால் இறந்த 236 பேரின் மரணம் மறைக்கப்பட்டது கவலை அளிக்கிறது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கொரோனாவை பற்றிய எந்த புரிதலும் இல்லாமல் தமிழக முதல்வர் இருப்பதாக குற்றம் சாட்டியுள்ள மு.க.ஸ்டாலின், கொரோனா இறப்பு விவரங்களை தமிழக அரசு வெளிப்படையாக கூற வேண்டும் என்று தெரிவித்துள்ளார். மேலும் கொரோனா தொற்றுப் பரவல் குறித்த தகவல்களை மறைக்கும் அரசின் போக்கு மிகவும் ஆபத்தானது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதுமட்டுமல்லாமல், நாட்டிலேயே கொரோனா தொற்று பரவல் அதிகரிக்கும் மாநிலங்களில் தமிழகம் 2வது இடத்தில் உள்ள நிலையில், அரசின் அலட்சியத்தால் கொரோனா பரவல் அதிகரித்து வருவதாகக் குற்றம் சாட்டிய மு.க.ஸ்டாலின், தமிழகத்தில் கொரோனா சமூகப் பரவலாக மாறியதற்கு தன்னிடம் ஆதாரம் இருப்பதாகவும் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்த தனது 5 கேள்விகளை மு.க.ஸ்டாலின் முன்வைத்துள்ளார். அவை,
1. சமூக பரவலே இல்லை என்பது உண்மை என்றால் தொற்று அதிகரிக்க காரணம் என்ன?
2. கொரோனாவை அறவே ஒழிப்போம் என்ற பொய் பேட்டிகளை தருவதை விட்டு, செயல்திட்டம் எப்போது அமைப்பீர்கள்?
3. மக்களை எத்தனை நாளைக்கு ஏமாற்றப் போகிறீர்கள்?
4. முக்கிய எதிர்க்கட்சிகளை கலந்து ஆலோசிக்க தொடர்ந்து மறுத்து வருவதன் காரணம் என்ன?
5. வேலைவாய்ப்பு, பொருளாதாரம் உள்ளிட்ட முக்கிய பிரச்சனைகளில் அரசு ஆர்வம் காட்டுவது எப்போது?
“இந்த கேள்விகளை மக்கள் சார்பாக நான் கேட்டுள்ளேன்” என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
பொறுப்புத்துறப்பு: கோவிட்-19 வைரசுக்கு எதிரான பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மத்திய, மாநில (தமிழக) அரசுகள் எதிர்கொண்டு வரும் நிலையில், இந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் யாவும் இன்றைய (ஜூன் 15,2020 ) செய்தியாளர் சந்திப்பில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் தனிப்பட்ட கருத்துக்களின் அறிக்கை வடிவத்தை அடிப்படையாகக் கொண்டதே தவிர, இந்த குற்றச்சாட்டுகளுக்கும் எமது செய்தி நிறுவனத்துக்கும் தொடர்பில்லை.