'மூச்சுத்திணறல்' மூலமாகவே 'அதிக உயிரிழப்பு...' 'ஆபத்தை' முன்கூட்டியே உணர்த்தும் 'அற்புதக் கருவி...' இதுதான் 'உயிரிழப்பை' கட்டுப்படுத்த 'ஒரே சிறந்த வழி...'
முகப்பு > செய்திகள் > தமிழகம்கொரோனா உயிரிழப்பு கணிசமாக அதிகரித்து வரும் நிலையில் பாதிப்பை முன்கூட்டியே அறிந்து கொள்வதன் மூலம் உயிரிழப்பை தடுக்க முடியும் என்கின்றனர் மருத்துவ நிபுணர்கள்...
கொரோனா மரணங்கள் பெரும்பாலும் மூச்சுத்திணறல் முற்றிய நிலையிலேயே ஏற்படுகின்றன. மூச்சுத் திணறல் ஏற்படும்போது வழக்கமான ஒன்றுதான் என பலர் எண்ணி கண்டுகொள்ளாமல் விட்டுவிடுகின்றனர். இந்த சமயத்தை பயன்படுத்திக் கொள்ளும் கொரோனா வைரஸ் நுரையீரலுக்கு செல்லும் ஆக்சிஜன் அளவை குறைத்து சுவாசப் பாதையில் பல சிக்கல்களை ஏற்படுத்தி உயிரை பறித்து விடுகிறது.
தீவிர மூச்சுத்திணறல் அறிகுறியுடன் மருத்துவமனையை அடைபவர்களே பெரும்பாலும் மரணம் அடைகின்றனர். இந்த மூச்சுத்திணறலின் தாக்கத்தை ஆரம்பத்திலேயே கண்டறிந்தால் உரிய நேரத்தில் மருத்துவமனையை அடைந்து உயிரை காத்துக் கொள்ள முடியும் என்கின்றனர் மருத்துவர்கள். வரவிருக்கும் ஆபத்தை வீட்டிலேயே அதிக செலவின்றி கண்டறிய முடியும் என்றும் கூறுகின்றனர் மருத்துவர்கள். இதற்கு பயன்படும் கருவிதான் பல்ஸ் ஆக்சிமீட்டர்.
இந்த கருவி உடலுக்குள் செல்லும் ஆக்சிஜன் செல்லும் அளவை கண்காணிக்கிறது. உடலுக்குள் திசுக்களில் ஆக்சிஜன் அளவு கடும் வீழ்ச்சி ஏற்படுவதை, "சைலன்ட் ஹைபோக்சியா" என அழைக்கின்றனர். இந்த சைலன்ட் ஹைபோக்சியா கட்டத்தை நோயாளி அடைவதற்கு முன்பே கண்டறிய பல்ஸ் ஆக்சிமீட்டர் உதவுகிறது.
உள்ளங்கைக்குள் அடங்கிவிடக் கூடிய இக்கருவியை மோதிர விரல் அல்லது சுட்டு விரலில் மாட்டினால் போதும். உடனே, சுவாசப்பாதையில் செல்லும் SpO2 எனும் ஆக்சிஜன் அளவினை துல்லியமாக இந்த கருவி காட்டிவிடுகிறது.
ஒருவரது உடலில் 95 சதவீதத்துக்கும் கீழாக ஆக்சிஜன் அளவு குறையும்போது மூச்சுத் திணறல் துவங்கும். அது ஆபத்தின் தொடக்கம். அப்போதே மருத்துவமனைக்கு செல்லவேண்டும் என்பதை இந்த கருவி உணர்த்துகிறது.
அதன்பிறகு சைலன்ட் ஹைபோக்சியா ஏற்பட்டால் ஆக்சிஜன் அளவு 80% முதல் 70% வரை கிடுகிடுவென வீழ்ந்து அபாய கட்டத்திற்கு சென்றுவிடுகிறது. இந்த கட்டத்தை எட்டினால் உயிரிழப்பு என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிடுகிறது. இந்த கட்டத்தை எட்டவிடாமல் பல்ஸ் ஆக்சிமீட்டர் எச்சரிக்கிறது.
இதன் சில்லரை விலை 1,900 ரூபாயில் தொடங்கி 5 ஆயிரத்துக்குள் உள்ளது. இந்த கருவி தனிமைப்படுத்தப்படும் அறிகுறியற்ற கொரோனா நோயாளிகளுக்கும் உயிர்காக்கும் ஆபத்பாந்தவனாக உள்ளது. வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நோயாளிகளுக்கு பல்ஸ் ஆக்சிமீட்டரை வழங்கவும் தமிழக அரசு திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.