'ஊரடங்கு நேரத்திலும் ஊழியர்களுக்கு வாரி வழங்கிய தொழிலதிபர்'... 'எங்க சார் இருக்கு உங்க கம்பெனி'... ஒரே நாளில் பலரின் செல்லப் பிள்ளையான முதலாளி!
முகப்பு > செய்திகள் > இந்தியாகொரோனாவால் உலகேம ஆட்டம் கண்டுள்ள இந்த நேரத்தில், தங்கள் பணியாளர்களைக் கைவிடாமல் அவர்களுக்கு அனைத்து உதவிகளையும் செய்து அசத்திய தொழிலதிபரின் செயல் பலரையும் மெய்சிலிர்க்கச் செய்துள்ளது.
கொரோனா காரணமாக உலகம் முழுவதும் பொருளாதாரம் கடும் சரிவைக் கண்டுள்ளது. இந்நிலையில் ஷார்ஜாவை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் , எலைட் குரூப் நிறுவனத்திற்கு கோவையிலும் அலுவலகம் உள்ளது. எலைட் குழுவுக்குச் சொந்தமாக 12 நிறுவனங்கள் செயல்பட்டு வரும் நிலையில், அதில் பணி புரிபவர்கள் பெரும்பாலும் இந்தியர்கள்.
தற்போது ஊரடங்கு காரணமாக ஷார்ஜாவில் பணியாற்றி வரும் தங்கள் பணியாளர்களைத் தாய்நாட்டுக்கு அனுப்ப எலைட் குரூப் நிறுவனர் ஹரிகுமார் முடிவு செய்தார். முதல்கட்டமாக 120 தொழிலாளர்களைத் தனி விமானத்தில் தாய்நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர் . இதில் ஆச்சரியம் என்னவென்றால் ஷார்ஜா விமான நிலையத்தில் சொந்த ஊருக்குச் செல்ல முடியாமல் தவித்துக் கொண்டிருந்த 50 இந்தியர்களும் அதே விமானத்தில் தாய்நாட்டுக்குத் திரும்பினர்.
அவர்கள் யாரிடமும் டிக்கெட் கட்டணம் வசூலிக்கப்படவில்லை. பி.பி. இ உடைகள், மாஸ்க்குகள், சானிடைஸர்களும் அவர்களுக்கு வழங்கப்பட்டது. மொத்தம் 170 பேருடன் அந்த விமானம் நேற்று கொச்சிக்கு வந்து சேர்ந்தது. அங்கிருந்து அவரவர் ஊர்களுக்குச் செல்லவும் சிறப்பு வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதுகுறித்து எலைட் குரூப் தலைவர் ஹரிகுமார் கூறுகையில், ''தாய்நாட்டிற்குத் திரும்பியுள்ள அனைத்து ஊழியர்களுக்கும் மூன்று மாதம் விடுப்பு அளிக்கப்பட்டுள்ளது.
கூடுதலாக ஒரு மாத சம்பளத்தையும் அளித்துள்ளோம். இருந்தாலும் ஏதேனும் நிதி நெருக்கடி ஏற்பட்டால் எங்களைத் தொடர்பு கொள்ளக் கூறியிருக்கிறேன். கொரோனா அச்சம் மறைந்த நிலைமை சகஜ நிலைக்கு வந்த பிறகு அனைவரும் ஷார்ஜா அழைத்து வரப்படுவார்கள். மேலும் கோவையிலும் எங்கள் நிறுவனத்துக்கு அலுவலகம் உள்ளது. அங்கே பணி புரிய விரும்புபவர்களுக்குக் கோவையில் வேலை செய்ய ஏற்பாடு செய்து தரப்படும்.
கொரோனா அச்சம் காரணமாக எங்களை ஊழியர்கள் மனதளவில் சோர்வடைந்துள்ளார்கள். அதனைப் போக்கி உங்களுக்கு நான் இருக்கிறேன் என்பதை அவர்களுக்கு உணர்த்தவே இதைச் செய்துள்ளோம்'' என அவர் கூறினார். கேரள மாநிலம் ஆழப்புலாவைச் சேர்ந்த ஹரிகுமார், சிறு வயதிலேயே சவுதி அரேபியாவுக்கு வேலை தேடிச் சென்று, தனது கடின உழைப்பால் இன்று தொழிலதிபராக உயர்ந்து நிற்கிறார்.
கொரோனா காரணமாகப் பலர் வேலையை இழந்து வருகின்றனர். பல நிறுவனங்கள் ஊழியர்களை எந்தவித முன்னறிவிப்பும் இன்றி நீக்கியது. இந்த சூழலில் ஹரிகுமாரின் செயல் பலரது பாராட்டைப் பெற்றுள்ளது. நெட்டிசன்கள் பலரும் ஹரிகுமாருக்கு தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள்.