'தமிழகத்தில் கொரோனா உச்ச நிலையில் உள்ளது'... '3 மாதங்களுக்கு பின்பு என்ன நடக்கும்?'... 'கடுமையான ஊரடங்கு'?... மருத்துவக்குழு பதில்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் மருத்துவ நிபுணர் குழுவுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை நடத்திய நிலையில், தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தற்போது உச்சத்தை எட்டியுள்ளதாக மருத்துவக் குழு தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் மருத்துவ நிபுணர் குழுவுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஊரடங்கு குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படலாம் எனக் கூறப்பட்ட நிலையில், முதலமைச்சரைச் சந்தித்த பிறகு மருத்துவக் குழு செய்தியாளர்களிடம் பேசினார்கள்.
அதில், ''தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தற்போது உச்சத்தை எட்டியுள்ளது. அதே நேரத்தில் உச்சத்தை எட்டியுள்ளதால் கொரோனா பாதிப்பு இனி குறையத் தொடங்கும். ஆனால் 3 மாதங்களுக்கு பின்பு மீண்டும் அதிகரிக்கும். சென்னையில் 4, 5, 6வது மண்டலங்களில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ளதை மருத்துவக் குழு கவனித்து வருகிறது. அதிகமாகப் பரிசோதனை செய்வதால் பாதிப்பு எண்ணிக்கை உயரும். அதேநேரத்தில் உயிரிழப்பைக் குறைக்க அதிக பரிசோதனை செய்வது அவசியம்.
நீரிழிவு, ரத்த அழுத்தம், புற்று நோய் மற்றும் சிறுநீரக கோளாறு உடையவர்களும் கொரோனாவால் அதிகம் உயிரிழக்கின்றனர். தமிழகத்தில் உயிரிழப்பு விகிதம் என்பது 60 வயதுக்கு மேல் அதிகமாகக் காணப்படுகிறது. மேலும் கொரோனா பாதிப்பு பகுதிகளில் அளிக்கப்பட்டுள்ள ஊரடங்கு தளர்வுகளைக் குறைக்கத் தமிழக அரசுக்கு நிபுணர் குழு பரிந்துரை செய்துள்ளது. கொரோனாவின் சிறிய அறிகுறிகள் இருந்தாலும் கூட மக்கள் அலட்சியம் செய்யக் கூடாது. காய்ச்சல் தொண்டை வலி இருந்து ஒரே நாளில் சரியானாலும் கொரோனா பரிசோதனை செய்வது நல்லது.
அதே நேரத்தில் காய்ச்சல், தொண்டை வலி வந்தவர்கள் தங்களை தாங்களே தனிமைப்படுத்திக் கொள்வது மிகவும் நல்லது. மேலும் கொரோனாவை கட்டுப்படுத்த பகுதிவாரியாகப் பரிந்துரைகளைத் தமிழக அரசுக்குக் கொடுத்துள்ளதாக மருத்துவக் குழு தெரிவித்துள்ளது.

மற்ற செய்திகள்
