'டி.வி. பார்த்த சிறுமியை அடித்து, வெயிலில் நிற்க வைத்த கொடூரம் '... '5 வயது சிறுமிக்கு நேர்ந்த பரிதாபம்'!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | May 21, 2019 10:34 AM

நாமக்கல் அருகே தொடர்ந்து டி.வி. பார்த்துக்கொண்டே, சரியாக படிக்காததால் வெயிலில் நிறுத்தப்பட்ட 5 வயது சிறுமி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

5 year old girl died due to mother attack in near namakkal

தேனியை சேர்ந்த பேராசிரியர் பாண்டியன், தனது மனைவி நித்ய கமலா மற்றும் 5 வயது மகள் லத்திகா ஸ்ரீ ஆகியோருடன் திருச்சி மாவட்டம் காட்டுப்புதூரில் 10 நாட்களுக்கு முன்புதான் குடியேறியுள்ளார். இவரது மனைவி நித்ய கமலா ஆசிரியர் பயிற்சி முடித்துள்ளார். இந்நிலையில், நேற்று காலை 5 வயது சிறுமியான லத்திகா ஸ்ரீ, தொடர்ந்து டி.வி. பார்த்துக் கொண்டு படிப்பில் கவனம் செலுத்தாமல் இருந்ததால், அவரது தாய் நித்ய கமலா கண்டித்துள்ளார்.

ஆனால், சிறுமி இதனைக் கண்டுகொள்ளாததால், ஆத்திரமடைந்த நித்ய கமலா குக்கர் மூடியால், லத்திகா ஸ்ரீயை தாக்கியதாகக் கூறப்படுகிறது. மேலும், அவரை வீட்டிற்கு வெளியே வெயிலில் நிற்க வைத்து தண்டித்துள்ளார். ரத்தக் காயங்களுடன் சிறுமி மயங்கி கீழே விழுந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர், அவரை மீட்டு, நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிறுமிக்கு முதலுதவி அளிக்கப்பட்டது.

பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில்  சிறுமி சேர்க்கப்பட்டார்.  அங்கு சிகிச்சைப் பலனின்றி சிறுமி உயிரிழந்தார். இதுதொடர்பாக குழந்தைகள் நல அலுவலர்கள் அளித்த புகாரின் பேரில், சிறுமியின் தாயான நித்யா கமலாவிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில், பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. ஆசிரியை நித்திய கமலாவுக்கு திண்டுக்கல் மாவட்டம் கீழபாடி தாலுகா அழகிரி கவுண்டனூர் என்ற கிராமம் சொந்த ஊராகும். இவருக்கு ஏற்கனவே சில வருடங்களுக்கு முன்பு பிரசன்னா என்பவருடன் திருமணம் நடந்தது.

இவர்களுக்கு லத்திகா ஸ்ரீ பிறந்துள்ளார். மகள் பிறந்தது முதல் பிரசன்னாவுடன் தொடர்ந்து நித்திய கமலாவுக்கு பிரச்சனை ஏற்பட்டு வந்ததாக கூறப்பட்டது. கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் நித்தியகமலா பிரசன்னாவை விட்டு பிரிந்து விட்டார். 2016-ம் ஆண்டு அதே ஊரை சேர்ந்த ஆசிரியர் முத்து பாண்டியனை திருமணம் செய்து கொண்டார்.

கடந்த 10 நாட்களுக்கு முன்பு திருச்சி மாவட்டம் காட்டுப்புதூர் நேதாஜி நகருக்கு 2-வது கணவர் முத்துப்பாண்டியன், மகள் லத்திகா ஸ்ரீ ஆகியோருடன் நித்திய கமலா குடி வந்துள்ளார். உடற்கல்வி ஆசிரியரான முத்துப் பாண்டியன் லத்திகா ஸ்ரீயை அடிக்கடி கடுமையான உடற்பயிற்சியை செய்யக்கூறி கொடுமைப்படுத்துவாராம். நேற்று மதியம் 12 மணிக்கு நித்திய கமலா ஆசிரியை வேலை வி‌ஷயமாக பயோடேட்டா தயார் செய்வதற்காக ஜெராக்ஸ் கடைக்கு சென்றுள்ளார்.

அப்போது வீட்டில் முத்துப்பாண்டியனும் லத்திகா ஸ்ரீயும் இருந்துள்ளனர். லத்திகா ஸ்ரீயை முத்துப்பாண்டியன் சில கடுமையான உடற்பயிற்சிகளை செய்ய கூறியுள்ளார். லத்திகாஸ்ரீ செய்யாததால் அவரை தென்னை மட்டையால் முதுகில் கடுமையாக தாக்கியதாக தெரிகிறது. மேலும் வெயிலிலும் நிற்க வைத்து கொடுமைப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இதில் வெயில் தாங்க முடியாமல் லத்திகா ஸ்ரீ மயங்கி விழுந்துள்ளார். கடைக்கு சென்று விட்டு திரும்பிய நித்திய கமலா, லத்திகா ஸ்ரீ மயங்கி கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார்.

இது குறித்து கணவர் முத்துப் பாண்டியனிடம் கேட்ட போது , அவர் டிபன் வாங்கி விட்டு வந்து விடுகிறேன் என்று கூறி விட்டு அவசரமாக அங்கிருந்து சென்று விட்டார். ஆனால் தென்னை மட்டையால் கடுமையாக தாக்கப்பட்டதாலும், வெயிலில் நிற்க வைத்து கொடுமைப்படுத்தியதாலும் உடல் நிலை மோசமடைந்து லத்திகா ஸ்ரீ பரிதாபமாக இறந்து விட்டாள்.

இதைத்தொடர்ந்து ஆசிரியர் முத்துப்பாண்டியனை போலீசார் வலைவீசி தேடினர். நேற்றிரவு சேலத்தில் பதுங்கி இருந்த போது, காட்டுப்புதூர் போலீசில் முத்துப்பாண்டியன் சிக்கினார். முத்துப் பாண்டியன் , நித்திய கமலா ஆகியோரை போலீசார் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : #GIRLCHILD #BEATEN #DIED #TRICHY