'போலி பத்திரம் வைத்து... எல்.ஐ.சி-யில் ரூ.48 லட்சம் அபேஸ் செய்த கும்பல்'... அதிர்ந்து போன வீட்டு ஓனர்... பக்கா ஸ்கெட்ச்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Manishankar | Feb 10, 2020 01:15 PM

சென்னை அயனாவரத்தைச் சேர்ந்த பாதிரியாரின் வீட்டுக்கு போலி பத்திரம் தயார் செய்து எல்.ஐ.சி.யில் 48 லட்சம் ரூபாய் பணம் வாங்கிய மோசடி கும்பலை போலீஸார் தேடி வருகின்றனர்.

48 lakh rupees fraud held in lic near ayanavaram chennai

சென்னை அயனாவரம் பழனி ஆண்டவர் கோவில் தெருவைச் சேர்ந்தவர், வின்சண்ட்(47). இவர் கிருத்துவ பாதிரியாராக இருந்து வருகிறார். கடந்த 2017-ம் ஆண்டு, மயிலாப்பூரைச் சேர்ந்த புரோக்கர் லோகநாதன் என்பவரிடம் அவசர தேவைக்காக, இவர் ரூபாய் 20 லட்சம் கேட்டுள்ளார். லோகநாதன், வீட்டின் பவர் பத்திரத்தை வாங்கிக்கொண்டு ரூபாய் ஐந்து லட்சம் கொடுத்து விட்டு மீதம் 15 லட்சத்தை ஓரிரு நாட்களில் தருவதாக கூறியுள்ளார்.

ஆனால், அதன் பின் லோகநாதன் ரூபாய் 15 லட்சத்தை பாதிரியார் வின்செண்டிடம் தரவேயில்லை. இந்த நிலையில், கடந்த ஜனவரி மாதத்தில் எல்ஐசி ஊழியர்கள் வின்சண்டிடம் தாங்கள் வாங்கிய ரூபாய் 48 லட்சத்திற்கு தவணை பணம் கட்டாததால் உங்களுடைய வீட்டை எல்ஐசி எடுத்துக் கொள்வதாகவும், உடனடியாக நீங்கள் வீட்டை காலி செய்ய வேண்டும் எனவும் கூறியுள்ளனர்.

பதற்றம் அடைந்த வின்செண்ட் எல்ஐசியில் தான் பணம் வாங்கவே இல்லை என கூறியுள்ளார். இதைத் தொடர்ந்து, கடந்த ஜனவரி மாதம் எல்ஐசி ஊழியர்கள் மற்றும் சில குண்டர்கள் உடனடியாக வீட்டை காலி செய்ய வேண்டும் என வின்செண்ட் மற்றும் அவரது குடும்பத்தாரை மிரட்டியுள்ளனர்.

இந்நிலையில், ஜனவரி 22ஆம் தேதி பாதிரியார் வின்சென்ட் அயனாவரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். வழக்குப்பதிவு செய்து விசாரணையை ஆரம்பித்தார் காவல் ஆய்வாளர் நடராஜன். சம்பந்தப்பட்ட புரோக்கர் லோகநாதனை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்த போது பல திடுக்கிடும் உண்மைகள் தெரியவந்தன.

பாதிரியார் வின்சண்டிடம் பவர் பத்திரத்தை வாங்கிக் கொண்ட புரோக்கர் லோகநாதன் அதனை அயனாவரத்தைச் சேர்ந்த ராஜி என்பவரிடம் கொடுத்து ரூபாய் 5 லட்சத்தை வாங்கி கொடுத்திருக்கிறார். மேலும் லோகநாதன் மற்றும் ராஜி ஆகியோர் இணைந்து போலி பத்திரங்கள் தயாரித்து லோகநாதனின் வீட்டை ஸ்ரீபெரும்புதூரை சேர்ந்த ரியல் எஸ்டேட் செய்து வரும் ராஜேஷ் என்பவருக்கு ரூபாய் 62 லட்சத்துக்கு விற்பனை செய்தது தெரிய வந்தது. மேலும் வீட்டை வாங்கிய ஸ்ரீபெரும்புதூரை சேர்ந்த ராஜேஷ் மேலும் சில போலி ஆவணங்களைச் சேர்த்து அங்குள்ள எல்ஐசியில் வீட்டை அடமானம் வைத்து ரூபாய் 48 லட்சம் வாங்கியதும், பணம் வாங்கிய தினத்தில் இருந்து தற்போது வரை தவணைத் தொகை கட்டவில்லை என்பதும், தவணைக் காலம் முடிந்து போனதால் எல்ஐசி ஊழியர்கள் தற்போது பாதிரியார் லோகநாதனின் வீட்டை ஜப்தி செய்ய வந்ததும் விசாரணையில் தெரியவந்தது.

இதனையடுத்து ராஜேஷுக்கு எல்ஐசியில் போலி பத்திரங்கள் மூலம் மோசடி செய்ய உதவிய நபர்களான எல்ஐசி ஏஜென்ட் அருண்குமார் மற்றும் எல்ஐசி ஊழியர் பாலா ஆகியோர் உதவி இருப்பதும் விசாரணையில் தெரியவந்தது.

இந்த வழக்கில் பாதிரியார் வின்சென்ட்டின் வீட்டை போலி பத்திரங்கள் மூலம் விற்பனை செய்த புரோக்கர் லோகநாதன் அயனாவரம் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

மேலும் இந்த மோசடியில் ஈடுபட்ட முக்கிய நபர்களான ராஜி, இவர்களிடமிருந்து வீடு வாங்கி எல்ஐசியில் போலி பத்திரம் கொடுத்து ரூபாய் 48 லட்சம் பணம் வாங்கிய ஸ்ரீபெரும்புதூர் சேர்ந்த ராஜேஷ். ராஜேஷுக்கு உதவி செய்த எல்ஐசி ஊழியர்களான பாலா மற்றும் அருண்குமார், மோசடியில் ஈடுபடுவதற்காக போலி பத்திரம் தயார் செய்து கொடுத்த சுரேஷ் மேத்யூ, ஹரி ஆகிய ஆறு நபர்களும் தலைமறைவாகியுள்ளனர். போலீசார் இந்த ஆறு நபர்களையும் தேடி வருகின்றனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக அயனாவரம் போலீசார் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர்.

Tags : #INSURANCE #FRAUD