சென்னையை பொறுத்தவரை கொரோனா பாதிப்பு 16% தெருக்களில் மட்டும் தான் உள்ளது என கொரோனா தொற்று தடுப்பு சிறப்பு அதிகாரி டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்து உள்ளார்.
தமிழ்நாட்டை பொறுத்தவரை சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் கொரோனா பரவல் அதிகம் உள்ளது. இதனால் மேற்கண்ட 4 மாவட்டங்களிலும் பேருந்து போக்குவரத்து நிறுத்தி வைப்பு உள்ளிட்ட பல்வேறு தடைகள் தற்போது தொடர்கின்றன. சென்னையில் ராயபுரம், தண்டையார்பேட்டை, கோடம்பாக்கம், திருவிக நகர், தேனாம்பேட்டை ஆகிய மண்டலங்களில் கொரோனா பரவல் அதிகம் இருக்கிறது.
இந்த நிலையில் சென்னையில் கொரோனா பரவல் அதிகம் உள்ள தெருக்கள் சதவீதம் மற்றும் பாதிப்பு எண்ணிக்கை குறித்து சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் தெரிவித்து இருக்கிறார்.
இதுகுறித்து அவர் நேற்று அளித்த பேட்டியில், ''கொரோனா தொற்று அதிகம் உள்ள தண்டையார்பேட்டை பகுதியில் உள்ள பொதுமக்களை சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளோம். சென்னையில் வசிப்பவர்களுக்கு 52 லட்சம் முககவசங்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் தெருவாரியாக எத்தனை பேருக்கு கொரோனா தொற்று பாதிக்கப்பட்டுள்ளது என்று கணக்கெடுக்கப்படுகிறது. சென்னையில் 39 ஆயிரத்து 539 தெருக்கள் உள்ளது. இதில் பாதிக்கப்பட்ட 20 ஆயிரம் பேர், 6 ஆயிரத்து 537 தெருக்களில் தான் உள்ளனர். அதாவது 16 சதவீதம் தெருக்களில் தான் இந்த தொற்று உள்ளது. 84 சதவீதம் தெருக்களில் நோய் தொற்று இல்லை.
தற்போது 4 ஆயிரத்து 404 தெருக்களில்தான் கொரோனா தொற்று உள்ளது. மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி 16 சதவீத தெருக்களிலும் பாதிப்பை குறைத்து விடுவோம். தேவையில்லாமல் மக்கள் பீதியடைய வேண்டாம்.சென்னையில் தொற்று மேலும் பரவாமல் தடுக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது,'' என்றார்.