கொரோனா பாதிப்பில் ‘டாப்’ இடத்தில் உள்ள சென்னைக்கு அடுத்து.. ‘புதிதாக’ இணைந்த மற்றொரு ‘மாவட்டம்’..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகமாக பாதிக்கப்பட்ட மாவட்டத்தில் சென்னைக்கு அடுத்து புதிதாக ஒரு மாவட்டம் இணைந்துள்ளது.

உலகளவில் கொரோனா தொற்று அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் இந்தியா 7-வது இடத்தில் உள்ளது. இந்தியாவில் மகாராஷ்டிரா, டெல்லி, குஜராத், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் கொரோனா பாதிப்பு 10 ஆயிரத்தை கடந்துள்ளது. இந்தியாவில் நாளுக்குநாள் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,27,273 ஆக அதிகரித்துள்ளது. இதில் 1,09,462 பேர் குணமடைந்துள்ளனர், 6,367 பேர் வைரஸ் தாக்கி உயிரிழந்துள்ளனர்.
இந்த நிலையில் நிதி ஆயோக் தலைமை நிர்வாக அதிகாரி அமிதாப் காந்த் கொரோனா பாதிப்பு குறித்த தகவலை வெளியிட்டுள்ளார். அதில், இந்தியாவின் மொத்த கொரோனா பாதிப்பில் 64 சதவீதம் 15 மாவட்டங்களில் இருந்தே பதிவாகியுள்ளது. இதில் மும்பை, டெல்லி மற்றும் சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. உலகளாவிய ஹாட் ஸ்பாட்களில் ஒன்றாக உள்ள மும்பையில் மொத்த பாதிப்பு 57.37 சதவீதமாகவும், நாட்டின் மொத்த பாதிப்பில் 19.94 சதவீதமாகவும் உள்ளது.
சென்னையை பொறுத்தவரை கடந்த இரண்டு நாட்களாக கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1000-ஐ தாண்டி வருகிறது. தமிழ்நாட்டின் மொத்த பாதிப்பில் சென்னையின் பங்கு 67.91 சதவீதமாக உள்ளது. நாட்டின் மொத்த பாதிப்பில் சென்னையின் பங்கு 8.59 சதவீதமாக உள்ளது. இதில் செங்கல்பட்டு மாவட்டம் புதிதாக இணைந்துள்ளது. மாநிலத்தின் மொத்த பாதிப்பில் 5.26 சதவீதமாகவும், நாட்டின் மொத்த பாதிப்பில் 0.67 சதவீதமாக செங்கல்பட்டு மாவட்டம் உள்ளது.

மற்ற செய்திகள்
