கொரோனா சிகிச்சைக்கு... இனிமே இந்த 'தடுப்பூசி' தான் பயன்படுத்த போறோம்: அமைச்சர் விஜயபாஸ்கர்
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகம் முழுவதும் இன்று ஒரே நாளில் கொரோனாவுக்கு 1438 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 12 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். இதுதொடர்பாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று மாலை செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் இன்று 1,438 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. அதில், 33 பேர் வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்கள். ஒரே நாளில் 15,692 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் தமிழகத்தில் மட்டும் 5,60, 673 மாதிரிகள் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டன. இது தான் இந்தியாவில் அதிகம்.
இன்று 861 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதன் மூலம் 15,762 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் இன்று 12 பேர் உயிரிழந்துள்ளனர். 12697 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தனியார் பரிசோதனை மையங்களுக்கு ஐ.சி.எம்.ஆர்., நிர்ணயித்த 4,500 ரூபாய் கட்டணத்தை 3 ஆயிரம் ரூபாயாக குறைத்துள்ளோம். கொரோனா பாதிப்பு விவரங்களை வெளிப்படை தன்மையுடன் சுகாதாரத்துறை வெளியிட்டு வருகிறது.
இறப்பு, பரிசோதனைகள் குறைத்து சொல்வதாக கூறுவது அடிப்படை ஆதாரமற்றது. தடுப்பூசி, மருந்துகள் இல்லாமல் உயிர்காக்கும் வழிமுறைகளை அரசு பின்பற்றுகிறது. ஆக்கப்பூர்வமான கருத்துகள், ஆலோசனைகளை கூறினால் ஏற்க அரசு தயாராக உள்ளது. பிசிஜி தடுப்பூசி மூலம் கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க அனுமதி பெற்றுள்ளோம். 30 தனியார் மருத்துவமனைகளை ஒருங்கிணைத்து கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றை நாம் அரசியல் ஆக்கக்கூடாது. நம்முடைய அறிக்கைகள் கொரோனா போரில் முன் நின்று போரிடும் ஊழியர்களை உற்சாகப்படுத்த வேண்டும். அவர்களை காயப்படுத்தக் கூடாது. நாம் விமர்சனம் செய்யலாம். ஆனால் அதில் அரசியல் ஆதாயம் இருக்கக்கூடாது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மற்ற செய்திகள்
