”சிங்கார வேலனே தேவா...” - நாதஸ்வர இசை மேதை காருகுறிச்சி அருணாசலம் அவர்களின் நூற்றாண்டு - காலத்தால் அழிக்க முடியாத இசைக்கலைஞனை போற்றுவோம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Issac | Apr 26, 2021 11:59 AM

1962-இல் வெளிவந்த ‘கொஞ்சும் சலங்கை’ திரைப்படத்தில், ஒரு காட்சியில் நடிகை சாவித்திரி பாடல் ஒன்றை பாடத் தொடங்குவார். அப்போது அங்கே வரும் ஜெமினி கணேசன் காதலுடன் கொஞ்சும் மொழியில், “சாந்தா ஏன் பாட்டை நிறுத்திவிட்டாய், உன் இசை என்னும் இன்ப வெள்ளத்தில் நீந்த ஓடோடிவந்த என்னை ஏமாற்றாதே சாந்தா” என்று கசிந்துருகுவார். அந்த பாடலை காலம் கடந்தும் இன்றைக்கும் பேசக் காரணம் பின்னணியில் இருந்த காருகுறிச்சி  அருணாசலம் என்கிற இசை மேதையின் நாதஸ்வர இசை. சாமான்ய மனிதனையும் சங்கீத ஞானம் உள்ளவர்களாக மாற்றிய பெருமை காருகுறிச்சியாரின் நாயனத்திற்கு உண்டு.

100th birthday of nadhaswaram legend Karu Kurichi Arunachaam

‘‘திருநெல்வேலியில் இருந்து அம்பாசமுத்திரம் போகிற வழியில் காணப்படும் சிறிய கிராமம் காருகுறிச்சி. அங்கு பிறந்த அருணாசலத்திற்கு சிறுவயதிலேயே நாதஸ்வரம் வாசிப்பதில் நுட்பம் கைகூடியது. அவர் கோவில்பட்டியை சேர்ந்த ராமலட்சுமி என்பவரை திருமணம் செய்த பிறகு பெரும்பாலும் அவர் வாழ்க்கை கோவில்பட்டியிலேயே கழிந்தது.

காருகுறிச்சி அருணாசலம் குறித்த தன் நினைவுகளை இலக்கிய மேதை கி. ராஜநாராயணன் கூறும்போது “காருகுறிச்சியார் எங்கள் ஊர் மாப்பிள்ளை. காருகுறி்ச்சியின் அப்பா, பூக்கட்டிக் கொண்டிருந்துள்ளார். அப்போது திருவாடுதுறை ராஜரத்தினம் பிள்ளை கல்லிடைக்குறிச்சியில் ஒரு கச்சேரிக்கு  வாசிக்க வருகிறார். அவருடன் வந்தவருக்குக் காய்ச்சல் ஏற்பட்ட காரணத்தினால் நாதஸ்வரம் வாசிக்க முடியாமல் போனது. அப்போது அந்த ஊரில் யாராவது நாதஸ்வரம் வாசிக்க தெரிந்தவர்கள் உள்ளார்களா என விசாரிக்கிறார். அதைக் கேட்ட காருகுறிச்சியாரின் தந்தை, நம் மகனை வாசிக்க சொல்லலாம் என முடிவு செய்து வரச் சொல்கிறார்.

100th birthday of nadhaswaram legend Karu Kurichi Arunachaam

காருகுறிச்சியார், ராஜரத்தினம் பிள்ளையிடம் நாதஸ்வரம் வாசித்துக்காட்டுகிறார். காருகுறிச்சியார் வாசிப்பதைக் கேட்டதும், அவரின் திறமையை உணர்ந்து தன்னுடன் அழைத்துச் சென்றுவிட்டார், ராஜரத்தினம் பிள்ளை. மிகப்பெரிய இசை மேதையின் கூடவே இருந்த காரணத்தினால், பிற்காலத்தில் நாதஸ்வர இசையில் பெரும் புகழ்பெற்றவராக விளங்கினார் காருகுறிச்சி அருணாசலம்!”

கும்பகோணம் அருகிலுள்ள சுவாமி மலையில்தான் காருகுறி்ச்சி அருணாசலம் முதன்முதலாக  தனியாகக் கச்சேரியில் நாயனம் வாசித்ததுள்ளார். அதுகுறித்த தன்  நினைவுகளைப் பகிர்ந்துக்கொண்டுள்ளார் சுவாமிமலை முருகன் கோயில் நாதஸ்வர வித்வான் மணிமாறன். “இங்கு நடந்த ஒரு கச்சேரியில் தான் முதன்முதலாக அவர் தனியாக வாசித்தார்.

100th birthday of nadhaswaram legend Karu Kurichi Arunachaam

அன்றைக்கு ராஜரத்தினம் பிள்ளையுடன் சேர்ந்து வாசிக்க தான் வந்திருந்தார். நள்ளிரவு 12 மணி வரைக்கும் வாசித்துவிட்டு, நீ இங்கேயே இருந்து நன்றாக வாசித்துவிட்டு கிளம்பு என சொல்லிவிட்டு ராஜரத்தினம் பிள்ளை சென்றுவிட்டார். அவர் போனதும் ஊர் மக்கள் எல்லாம் கச்சேரி முடிந்தது என கிளம்ப ஆயத்தமானார்கள். அப்போது மீண்டும் ஒலிக்க ஆரம்பித்த நாயன இசை அவர்களை வீட்டுக்கு போகவிடாமல் இருக்கையில் அமர வைத்தது. அதற்கு காரணம் அப்போது காருகுறிச்சியார் வாசிக்க ஆரம்பித்தது தான். கிளம்பி சென்ற ராஜரத்தினம் திரும்பி வந்துவிட்டதாகவே நினைத்துள்ளார்கள். காலை 7 மணி வரைக்கு உஜ்ஜயினி வாசித்திருக்கிறார் காருகுறிச்சியார். விடியற்காலை 4 மணிக்கு இறங்க வேண்டிய சாமி பகல் 12 மணிக்குத்தான் இறங்கியது. அதுவரைக்கும் தொடர்ந்து வாசித்திருக்கிறார். எந்த ஒரு வித்வானாக இருந்தாலும் தஞ்சாவூர் மாவட்டத்தில் தனிக்கச்சேரி வாசித்தால் பிரபலமாகிவிடலாம். அது இயற்கையாகவே காருகுறிச்சியாருக்கு அமைந்துவிட்டது.” என்று தன் நினைவுகளை பகிர்ந்துள்ளார்.

ஒருமுறை டெல்லியில் குடியரசு தலைவர் மாளிகையில் நாதஸ்வரம் வாசிக்க சென்றபோது, ஜனாதிபதி ராதாகிருஷ்ணனே வந்து காரைத் திறந்து அழைத்துக்கொண்டு போயுள்ளார் ‘நீங்க இப்படி செய்யலாமா?’ன்னு  காருகுறிச்சியார் கேட்டுள்ளார். அப்போது,‘ஒரு காருகுறிச்சி அருணாசலம், ஜனாதிபதி ஆக முடியும். ஆனா, ஜனாதிபதியா இருக்கிற நான் எப்பவும் காருகுறிச்சியாராக ஆக முடியாது இல்லையா!’ என்று கூறியிருக்கிறார். அந்த அளவிற்கு குடியரசு தலைவர் ராதாகிருஷ்ணனுக்கு காருகுறிச்சியார் மேல் மரியாதை இருந்தது.

100th birthday of nadhaswaram legend Karu Kurichi Arunachaam

கலைவாணர்  என்.எஸ்.கிருஷ்ணனுக்கும் இவருக்கும் நெருங்கிய நட்பு காணப்பட்டது. சென்னைக்கு சென்றால் என்.எஸ்.கே அவர்கள் வீட்டில் தங்குவது தான் வழக்கம். அந்த காலக்கட்டத்தில் காருகுறிச்சியாருக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. உடனே  என்.எஸ்.கே-மதுரம் தம்பதியினர் நினைவாக தன் குழந்தைக்கு ‘மதுரவாணி’ என்று பெயர் வைத்துள்ளார். நடிகர் திலகம் சிவாஜி கணேசன் காருகுறிச்சியார் குடும்பத்தில் உள்ள ஒருவராகவே இருந்துள்ளார். அடிக்கடி காருகுறிச்சியாரை காண வீட்டுக்கு வருவதுண்டு. குழந்தைகள் எல்லாம் அவரை பெரியப்பா என்று அழைப்பார்களாம். அந்த அளவிற்கு குடும்ப நன்பர்காளாக இருந்துள்ளனர்.

காருகுறிச்சியாரை ஜெமினி கணேசனுக்கும் சாவித்திரிக்கும் மிகவும் பிடிக்கும். இதன்காரணமாக, அவர் வாழ்ந்த ஊரான கோவில்பட்டியில் அவர்களின் சொந்த செலவில் மணிமண்டபம் கட்டி அவர் சிலையை திறந்து வைத்தார்கள். இன்றைக்கும் பங்களா தெரு போகும் வழியில் அரசு மருத்துவமனையின் முன்னால் காருகுறிச்சியாரின் சிலை கம்பீரமாக நிற்கிறது.

100th birthday of nadhaswaram legend Karu Kurichi Arunachaam

இன்று (26-04-2021) அவருக்கு நூறாவது பிறந்த நாள். நூற்றாண்டு விழா கொண்டாடுவதை முன்னிட்டு சினிமா இசை ரசிகர்கள் மட்டுமல்லாமல், தமிழ் இசை ரசிகர்கள் அனைவருமே அவரை கொண்டாடி வருகின்றனர். காலத்தால் அழிக்க முடியாத தமிழ் மரபின் இசைக்கலைஞனான காருகுறிச்சி அருணாசலம் அவர்களை போற்றுவோம்!

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. 100th birthday of nadhaswaram legend Karu Kurichi Arunachaam | Tamil Nadu News.