‘இந்திய அணியைச் சீண்டி ட்விட்டர் பதிவு..’ முன்னாள் வீரரை வறுத்தெடுத்த ரசிகர்கள்..

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Saranya | Jul 02, 2019 04:08 PM

உலகக் கோப்பை லீக் ஆட்டத்தில் இந்திய அணிக்கு எதிரான போட்டியில் சிறப்பாக விளையாடிய இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது.

World cup Michael Vaughan takes a dig at Team India

பர்மிங்ஹாமில் நடைபெற்ற போட்டியில் முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 337 ரன்கள் குவித்தது. அடுத்து விளையாடிய இந்தியா 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 306 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது. இந்திய அணியில் கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்த தோனி 42 ரன்களும், கேதர் ஜாதவ் 12 ரன்களும் எடுத்தனர். இந்திய அணியின் தோல்விக்கு பவுலர்கள் அதிக ரன்கள் கொடுத்தது, பேட்டிங் என பல காரணங்கள் இருந்தாலும், அதில் குறிப்பாக தோனி மற்றும் ஜாதவ் இருவரும் கடைசி 5 ஓவர்களில் விளையாடிய விதம் பலராலும் விமர்சிக்கப்பட்டு வருகிறது. இதைத் தொடர்ந்து அடுத்ததாக இந்தியா வங்கதேசத்துடன் மோதுகிறது.

இந்நிலையில் கிரிக்கெட் விமர்சகர் ஹர்ஷா போக்லே ட்விட்டரில் இலங்கைக்கு எதிராக விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணியின் சேஸிங்கைப் பாராட்டிப் பதிவிட்டுள்ளார். அதைப் பகிர்ந்துள்ள இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கெல் வாகனின் ட்வீட் ரசிகர்களின் விமர்சனத்துக்கு ஆளாகியுள்ளது. ஹர்ஷா போக்லே பதிவிட்டுள்ள ட்வீட்டில், “வெஸ்ட் இண்டீஸ் அணியை விரும்பியே ஆக வேண்டும். இலக்கு எட்ட முடியாத நிலையில் உள்ளபோதும் அவர்கள் அதற்காக முயற்சிக்கிறார்கள்” எனக் கூறியுள்ளார். இதைப் பகிர்ந்துள்ள மைக்கெல் வாகன் அதில், “இந்தியாவைப் போல இல்லாமல்” என சேர்த்து ட்வீட் செய்துள்ளார். இதற்கு ரசிகர்கள் பலரும் இந்தியாவிற்கு ஆதரவாகவும், இங்கிலாந்தைக் கிண்டல் செய்தும் பதிலளித்து வருகின்றனர்.

 

 

 

Tags : #ICCWORLDCUP2019 #INDVSENG #MICHAELVAUGHAN #HARSHABHOGLE #TEAMINDIA