எந்த கேப்டனும் செய்யாத சாதனை..! தோல்வியிலும் புது வரலாறு படைத்த ‘கிங்’ கோலி..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Selvakumar | Jul 01, 2019 10:44 AM
இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.
இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான உலகக்கோப்பை லீக் போட்டி நேற்று பிர்மின்கம் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் இந்திய அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்திடன் தோல்வியைத் தழுவியது. இதில், இங்கிலாந்து அணியைப் பொறுத்தவரை ஜேசன் ராய்(66), ஜானி பேர்ஸ்டோ(111), பென் ஸ்டோக்ஸ்(79) ஆகியோர் சிறப்பாக பேட்டிங் செய்தனர்.
அதேபோல் இந்திய அணியில் ரோஹித் ஷர்மா(102), விராட் கோலி(66) ஆகியோர் சிறப்பாக பேட்டிங் செய்தனர். ஆனாலும் இந்திய அணியின் பந்துவீச்சு சற்று சுமாராக காணப்பட்டது. இதில் சுழற்பந்து வீச்சாளர்களான குல்தீப் யாதவ் மற்றும் யுவேந்திர சஹால் ஆகிய இருவரும் தலா 10 ஓவர்களை வீசி 160 ரன்களை வாரி வழங்கினர். ஆனாலும் வேகப்பந்து வீச்சாளர்களான பும்ரா மற்றும் முகமது ஷமி ஆகிய இருவரும் அவ்வப்போது விக்கெட்டுகளை எடுத்து ரன்களை கட்டுப்படுத்தினர். இதில் முகமது ஷமி 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.
இந்நிலையில் இப்போட்டியில் 66 ரன்கள் அடித்ததன் மூலம் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். உலகக்கோப்பை தொடரில் தொடர்ந்து 5 அரைசதங்களை கடந்த முதல் கேப்டன் என்ற பெருமை விராட் கோலி அடைந்துள்ளார். கடந்த 2015 -ம் ஆண்டு நடந்த உலகக்கோப்பை தொடரில் ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் தொடர்ந்து 5 அரைசதங்களை அடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.