'நிதான ஆட்டம், சாதனை புரிந்த ரோகித் சர்மா'... 'ஹிட்மேனை புகழ்ந்து தள்ளிய கேப்டன்'!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Sangeetha | Jun 06, 2019 09:51 AM
ரோகித் சர்மாவின் சிறப்பான சதத்தால் தான், தென்னாப்ரிக்காவுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி வெற்றி பெற முடிந்தது என கேப்டன் விராட் கோலி புகழாரம் சூட்டியுள்ளார்.

உலகக் கோப்பை தொடரில் இந்தியா, தென்னாப்ரிக்கா அணிகளுக்கு இடையிலான போட்டி சவுதம்டன் நகரில் புதன்கிழமையன்று நடைபெற்றது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென்னாப்ரிக்க அணி, 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 227 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் ஒருவர் கூட அரைசதம் அடிக்கவில்லை.
இதனையடுத்து, 228 ரன்கள் என்ற இலக்குடன் இந்திய அணி விளையாடியது. ஒருபுறம் விக்கெட்கள் வீழ்ந்தாலும் தொடக்க ஆட்டக்காரரான ரோகித் சர்மா நிதானமாக நின்று விளையாடினார். தொடக்கத்தில் மிகவும் பொறுமையாக ரோகித் விளையாடினாலும், பின்னர் அடித்து விளையாட ஆரம்பித்தார். தொடர்ந்து சிறப்பாக விளையாடிய ரோகித் சர்மா 128 பந்துகளில் சதம் அடித்தார்.
இறுதியில் இந்திய அணி 47.3 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 230 ரன்கள் எடுத்ததன் மூலம், இந்திய அணி தன்னுடைய முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது. இந்நிலையில் போட்டிக்குப் பின் பேசிய கேப்டன் விராட் கோலி, 'மிகவும் கடினமான போட்டி இது. மிகுந்த அழுத்தத்துடன் விளையாட வேண்டி இருந்தது. எதிர்பார்ப்புகள் மிகவும் நிறைந்த உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில், ரோகித் சர்மாவிற்கு, இந்த ஒருநாள் இன்னிங்ஸ்தான் மிகவும் சிறப்பானது என நான் கருதுகிறேன்' என்று கூறினார்.
சர்வதேச ஒருநாள் அரங்கில் ரோகித் சர்மா அடித்த 23-வது சதமாக புதன்கிழமையன்று நடந்தப் போட்டியில் அமைந்தது. இதன் மூலம் ஒருநாள் அதிக சதம் அடித்த இந்திய வீரர்கள் பட்டியலில், முன்னாள் கேப்டன் கங்குலி (22 சதம்) சாதனையை ரோகித் சர்மா உடைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
"By far, Rohit's best innings in ODIs" – #ViratKohli was delighted with Rohit Sharma's match-winning knock against South Africa. ⬇️ #CWC19 | #TeamIndia pic.twitter.com/1Xl1F1lJPY
— Cricket World Cup (@cricketworldcup) June 6, 2019
