‘அப்படி’ பண்ணியிருக்கக் கூடாது ஆனாலும்... ‘நியாயப்படுத்தும்’ கேப்டன்... ‘மீண்டும்’ கிளம்பியுள்ள ‘மன்கட்’ ரன் அவுட் ‘சர்ச்சை’...

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Saranya | Feb 01, 2020 09:24 PM

யு-19 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆப்கானிஸ்தான் பவுலர் பாகிஸ்தான் பேட்ஸ்மேனை மன்கடிங் முறையில் ரன் அவுட் செய்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Video Mankad Run Out Controversy Returns At U19 World Cup

கடந்த 31ஆம் தேதி நடைபெற்ற யு-19 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் காலிறுதிப் போட்டியில் பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. முதலில் விளையாடிய ஆப்கானிஸ்தான் அணி 189 ரன்கள் எடுத்திருந்த நிலையில், அடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் அணியில் தொடக்க வீரராக முகமது ஹுரைரா தன் அறிமுகப் போட்டியில் விளையாடினார்.

ஹுரைரா 76 பந்துகளில் 64 ரன்கள் எடுத்து சிறப்பாக விளையாடி வந்த நிலையில், ரன்னர் முறையில் அவர் கொஞ்சம் கிரீசை விட்டு நகர்ந்தார் என்பதற்காக ஆப்கானிஸ்தான் பவுலர் நூர் அகமெட் அவரை மன்கடிங் முறையில் ரன் அவுட் செய்து வெளியேற்றினார். இதையடுத்து விதிப்படி இது சரியென்ற போதிலும், தார்மீகப்படி தவறு என்ற சர்ச்சை எழுந்துள்ளது.

இதுகுறித்துப் பேசியுள்ள ஆப்கானிஸ்தான் கேப்டன் பர்ஹான் ஸகீல், “அந்த நேரத்தில் பாகிஸ்தான் அணிக்கு நெருக்கடி கொடுக்க வித்தியாசமாக ஏதாவது செய்ய நினைத்தோம். உண்மையில் இப்படி செய்வது ஸ்பிரிட் ஆஃப் த கேமில் இல்லை. ஆனால் எங்களுக்கு வேறு வழியில்லை, வெற்றி பெற்றே ஆக வேண்டும். விதியின்படி, அவுட் கிரீசுக்குள் இருக்க வேண்டும். பிட்சின் அளவை 18 அடியாக ரன்னர் குறைக்க நினைத்தால் அவர் எங்களுக்கு பிரச்சனையை அளிக்க நினைக்கிறார் என்றே அர்த்தம்” என மன்கட் ரன் அவுட்டை நியாயப்படுத்தியுள்ளார்.

இதுபற்றிப் பேசியுள்ள பாகிஸ்தான் பேட்ஸ்மேன் ஹுரைரா, “நான் கிரீசை விட்டு நகர்ந்திருக்கக் கூடாது. என் முதல் சர்வதேச போட்டியில் இது ஒரு கசப்பான அனுபவம். என்னுடைய தவறை திருத்திக்கொள்வேன்” எனக் கூறியுள்ளார். இந்தப் போட்டியில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ள பாகிஸ்தான் அரையிறுதியில் இந்திய அணியை எதிர்கொள்ள இருப்பது குறிப்பிடத்தக்கது.

 

 

Tags : #CRICKET #PAKISTAN #VIDEO #MANKAD #RUNOUT #U19