"என் 'அப்பா' கூட இப்படி பண்ணது இல்ல... 'அஸ்வின்' செஞ்சுரி அடிக்குறதுக்கு முன்னாடி 'சிராஜ்' சொன்னது இதான்... 'மனுஷன்' ரொம்ப 'ஃபீல்' ஆயிட்டாரு போல!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையே சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து அணியை அபாரமாக இந்திய அணி வீழ்த்தியிருந்தது.
இந்த போட்டியில், சென்னை மண்ணின் மைந்தன் அஸ்வின், 8 விக்கெட்டுகளை வீழ்த்தியது மட்டுமில்லாமல், இரண்டாவது இன்னிங்ஸில் சதமடித்து அசத்தியிருந்தார். இந்நிலையில், சதமடித்த போது நடந்த சுவாரஸ்ய சம்பவம் ஒன்றை அஸ்வின் தற்போது பகிர்ந்துள்ளார்.
அஸ்வின் சதமடித்த போது, அவருடன் சிராஜ் தான் பேட்டிங் செய்து கொண்டிருந்தார். கடைசி விக்கெட் என்பதால் இருவரும் கவனமாக ஆடிக் கொண்டிருந்தனர். முன்னதாக, அஸ்வின் தொண்ணூறுகளில் இருந்த போது, சிராஜ் அவுட் ஆகாமல் கவனமாக ஆடினார். தனக்கு வரும் பந்துகளை மிக சிறப்பாக எதிர்கொண்ட சிராஜ், அதனை ரன்களாக மாற்றி, அஸ்வினுக்கு வாய்ப்பு கொடுத்து கொண்டிருந்தார்.
சிராஜ் ஒவ்வொரு பந்தை எதிர்கொண்டு ஆடும் போதும், சென்னை ரசிகர்கள் ஆர்ப்பரித்து உற்சாக வரவேற்பை கொடுத்தனர். அப்போது சென்னை ரசிகர்களை பாராட்டி, மைதானத்தில் வைத்தே சிறப்பான கருத்து ஒன்றை அஸ்வினிடம் சிராஜ் கூறியுள்ளார். 'நான் இதற்கு முன்பு டிபன்ஸ் ஆடிய போது யாரும் என்னை பாராட்டியதில்லை. எனது தந்தை கூட என்னை பாராட்டியதில்லை. ஆனால், இங்குள்ள ரசிகர்கள் ஒவ்வொரு பந்துக்கும் என்னை பாராட்டுகிறார்கள். நான் கண்டிப்பாக அவுட்டாக மாட்டேன்.
நான் உங்களுக்கு ஸ்ட்ரைக் தருகிறேன். நீங்கள் ஆடுங்கள். நீங்கள் நிச்சயம் சதமடிப்பீர்கள். எனக்கு அந்த நம்பிக்கை உள்ளது' என சிராஜ் சென்னை ரசிகர்கள் பற்றி நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார். அதே போல, அஸ்வின் சதமடித்த போது, அதனை அவரை விட அதிகம் கொண்டாடியது சிராஜ் தான். அந்த தருணம் தனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்ததாக அஸ்வின் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.