காத்தோட உன் வாசம்.. ஊரெல்லாம் உன் பாசம்.. கண்ணே நீ திரும்பி வரணும் எங்களுக்கு.. கிறிஸ் கெய்லுக்கு ஆசைப்பட்ட 2 அணிகள்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டு'Universal Boss' என அழைக்கப்படும் கிறிஸ் கெயிலை, இந்த முறையும் ஐபிஎல் தொடரில் தேர்வு செய்ய இரு அணிகள் விருப்பம் தெரிவித்தது பற்றி, தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஐபிஎல் மெகா ஏலம், வரும் 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. 15 ஆவது ஐபிஎல் தொடரில், இரண்டு புதிய அணிகள் இணைக்கப்பட்டுள்ள நிலையில், மொத்தம் 10 அணிகள் இந்த முறை ஐபிஎல் தொடரில் பங்கேற்கிறது.
இதனைத் தொடர்ந்து, ஏலத்திற்கான வீரர்களின் இறுதி பட்டியல், அதிகாரபூர்வமாக சமீபத்தில் வெளியிட்டிருந்தது.
ஐபிஎல் ஏல பட்டியல்
590 வீரர்கள் பெயர் அடங்கிய இந்த பட்டியலில், ரவிச்சந்திரன் அஸ்வின், முகமது ஷமி, பேட் கம்மின்ஸ், டேவிட் வார்னர், ஷிகர் தவான் உள்ளிட்ட வீரர்களுக்கு ஆரம்ப விலையாக 2 கோடி ருபாய் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதே போல, இந்த பட்டியலில் இந்திய இளம் வீரர்கள் பெயரும் அதிகம் இடம்பெற்றுள்ளது. மொத்தம் 370 இந்திய வீரர்கள் இந்த பட்டியலில் இடம்பிடித்துள்ளனர்.
கலந்து கொள்ளாத வெளிநாட்டு வீரர்கள்
இதனைத் தவிர்த்து, கிறிஸ் கெயில், பென் ஸ்டோக்ஸ், மிட்செல் ஸ்டார்க், ஜோஃப்ரா ஆர்ச்சர் உள்ளிட்ட சில முன்னணி வெளிநாட்டு வீரர்கள், ஐபிஎல் தொடரில் இருந்து விலகியுள்ளனர். இதனால், அவர்கள் தங்களின் பெயர்களை ஐபிஎல் ஏலத்தில் பதிவு செய்து கொள்ளவில்லை. இதில், 'Uiversal Boss' எனப்படும் அதிரடி வீரர் கிறிஸ் கெயில், ஐபிஎல் தொடரில் பங்கேற்காதது, ஐபிஎல் ரசிகர்கள் மத்தியில் கடும் வேதனையை ஏற்படுத்தியிருந்தது.
Universal Boss
2009 ஆம் ஆண்டுக்கு பிறகு, கெயில் இல்லாமல் நடைபெற போகும் முதல் ஐபிஎல் தொடர் இதுவாகும். ஐபிஎல் தொடரில் அதிக சதங்கள் (6) அடித்துள்ள கெயில், தனி நபர் அதிகபட்ச ஸ்கோரையும் (175 ரன்கள்) தன்வசம் வைத்துள்ளார். அப்படிப்பட்ட அதிரடி வீரர், ஐபிஎல் தொடரில் இருந்து விலகியுள்ளது, சற்று அதிர்ச்சியை தான் ஏற்படுத்தியுள்ளது. வயது காரணமாக, அவர் இந்த முடிவை எடுத்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
ஏமாந்த இரு அணிகள்
ஒட்டு மொத்த ஐபிஎல் தொடரில், கொல்கத்தா, பெங்களூர் மற்றும் பஞ்சாப் ஆகிய அணிகளுக்காக கெயில் ஆடியுள்ளார். இந்நிலையில், இந்த மூன்று அணிகளில் இரண்டு அணிகள், கெயில் பெயர் ஏல பட்டியல் இணைந்திருக்க வேண்டும் என விருப்பப்பட்டதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளது.
அதாவது, அவரை மீண்டும் அணியில் இணைக்க வேண்டி, இரு அணிகள் ஆர்வம் கொண்டுள்ளனர். ஆனால், அவர் தனது பெயரை ஏலத்தில் பதிவு செய்யாத காரணத்தினால், இரு அணிகளுக்கும் ஏமாற்றமே மிஞ்சியுள்ளதாக கூறப்படுகிறது.
கெயில் - டிவில்லியர்ஸ்
கெயிலை போல ஐபிஎல் தொடரில் ஜொலித்த மற்றொரு வெளிநாட்டு வீரரான டிவில்லயர்ஸும் இந்த முறை ஐபிஎல் தொடரில் பங்கேற்கவில்லை. இதனால், கெயில் மற்றும் டிவில்லியர்ஸ் ஆகிய இருவரில், ஒருவர் கூட பங்கேற்காத முதல் ஐபிஎல் தொடரும் இந்த முறை நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.