"எனக்கு 8 ஆவது இடமா குடுத்துருக்கீங்க??.." தன்னைப் பற்றிய கமெண்ட்.. களத்தில் இறங்கி கெத்தாக செஞ்சு விட்ட ஜடேஜா
முகப்பு > செய்திகள் > விளையாட்டுதன்னைக் குறித்த ட்வீட் ஒன்றிற்கு, தன்னுடைய ஸ்டைலிலேயே பதிலளித்துள்ளார் சிஎஸ்கே வீரர் ரவீந்திர ஜடேஜா.

15 ஆவது ஐபிஎல் போட்டி, மார்ச் மாத இறுதியில் ஆரம்பமாகும் என கூறப்பட்டு வரும் நிலையில், பிப்ரவரி மாதம் 13 மற்றும் 14 ஆகிய தினங்களில், ஐபிஎல் மெகா ஏலம் நடைபெறும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்தாண்டு ஐபிஎல் தொடருக்கு, அகமதாபாத் மற்றும் லக்னோ அணிகள் என இரண்டு அணிகள் புதிதாக இணைந்துள்ள நிலையில், மொத்தம் 10 அணிகள் ஐபிஎல் தொடரில் பங்கேற்கவுள்ளது.
ஐபிஎல் ஏலம்
அனைத்து அணிகளும், 2 முதல் 4 வீரர்கள் வரை தக்க வைத்துக் கொண்டுள்ளனர். ஏறக்குறைய ஒரு அணி முழுவதையும் மெகா ஏலத்தில், அனைத்து அணிகளும் தேர்ந்தெடுக்கும் என்பதால், நிச்சயம் பிரபல வீரர்களுக்கு கடும் போட்டி நிலவும் என்றே கருதப்படுகிறது. இதனால், நிச்சயம் இரண்டு நாட்களும் ஐபிஎல் ஏலம் களை கட்டும் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர்.
நடப்பு சாம்பியன் சிஎஸ்கே
கடந்த ஆண்டு, ஐபிஎல் தொடரின் இரண்டாம் பாதி, துபாயில் வைத்து நடைபெற்றிருந்த நிலையில், தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, 4 ஆவது முறையாக கோப்பையைக் கைப்பற்றி அசத்தியிருந்தது. இந்நிலையில், இந்த ஆண்டு ஐபிஎல் தொடருக்காக, எம்.எஸ். தோனி, ரவீந்திர ஜடேஜா, ருத்துராஜ் கெய்க்வாட் மற்றும் மொயீன் அலி ஆகியோரை சிஎஸ்கே தக்க வைத்துள்ளது.
சென்னை வந்த தோனி
ஐபிஎல் ஏலத்தில் வீரர்களைத் தேர்வு செய்வது பற்றி விவாதிக்க, கடந்த சில தினங்களுக்கு முன், சிஎஸ்கே கேப்டன் தோனி சென்னை வந்தடைந்தார். எந்தெந்த வீரர்களை குறி வைக்கலாம் என்பது பற்றி, சென்னை அணி தீவிரமாக ஆலோசனை மேற்கொள்ளவுள்ளது என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
'சிஎஸ்கே'வின் ப்ளேயிங் லெவன்
இந்நிலையில், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் ட்விட்டர் பக்கம், ட்வீட் ஒன்றை செய்திருந்தது. அதில், சென்னை அணியின் ஆடும் லெவன் எப்படி இருக்கும் என்ற ஒரு கேள்வியை எழுப்பியிருந்தது. இதில் தக்க வைத்துக் கொண்ட வீரர்களில், கெய்க்வாட் பெயர் முதல் இடத்திலும், மொயீன் அலி மற்றும் தோனி ஆகியோர் பெயர் முறையே 3 மற்றும் 7 ஆவது இடத்தில் உள்ளது.
ஜடேஜா கிண்டல்
பேட்டிங் வரிசையில் இந்த இடம் அளிக்கப்பட்டிருந்த நிலையில், ரவீந்திர ஜடேஜா பெயர் 8 ஆவது இடத்தில் இருந்தது.
இந்த ட்வீட் ஜடேஜாவின் கண்ணில் பட, ட்வீட் தமிழில் இருந்ததால், முதலில் அதற்கான அர்த்தத்தை அவர் கேட்டார். அர்த்தம் தெரிந்து கொண்ட பிறகு, 'ஏன் இவ்வளவு சீக்கிரமாக 8 ஆவது இடத்தில் இறக்குகிறீர்கள்?. 11 ஆவது இடத்தில் இறக்கி விடுங்கள்' என கடைசி பேட்டிங் வரிசையில் தான் இறங்கிக் கொள்வது போல, கிண்டலாக கமெண்ட் செய்தார்.
No 8 too early for me ! Put me @ 11🤣🤣
— Ravindrasinh jadeja (@imjadeja) January 29, 2022
பேட்டிங்கில் முன்னேற்றம்
இந்திய அணியின் நம்பர் 1 ஆல் ரவுண்டரான ரவீந்திர ஜடேஜா, காயம் காரணமாக, கடந்த சில தொடர்களில் இடம்பெறவில்லை. அதிரடி பேட்ஸ்மேனான ஜடேஜா, பேட்டிங் வரிசையில் கடின உழைப்பால் முன்னேற்றம் கண்டு, சில நேரம் 5 ஆவது வீரராக கூட களமிறங்கி வருகிறார்.
அப்படி இருக்கையில், மீண்டும் அவரை 8 ஆவது இடத்தில் குறிப்பிட்டதால், இப்போது பேட்டிங் வரிசையில் முன்னேறி இருக்கிறேன் என்பதை தான் ஜடேஜா நக்கலாக குறிப்பிட்டார் என ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

மற்ற செய்திகள்
