IPL ஏலத்தில் முதல் பூட்டான் வீரர்??.. DHONI கொடுத்த 'நச்' அட்வைஸ்.. பட்டையைக் கிளப்புங்க தம்பி
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஐபிஎல் தொடரில், பூட்டான் நாட்டைச் சேர்ந்த வீரர் ஒருவரின் பெயர் பதிவு செய்யப்பட்டது, அந்நாட்டு கிரிக்கெட் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
15 ஆவது ஐபிஎல் தொடரில், இந்த முறை இரண்டு அணிகள் புதிதாக சேர்க்கப்பட்டு, மொத்தம் 10 அணிகள் பங்கேற்கவுள்ளது.
அகமதாபாத் மற்றும் லக்னோ ஆகிய புதிய அணிகள் முறையே ஹர்திக் பாண்டியா, ரஷீத் கான் மற்றும் சுப்மன் கில் ஆகிய வீரர்களையும், கே எல் ராகுல், மார்கஸ் ஸ்டியோனிஸ் மற்றும் ரவி பிஷ்நோய் ஆகிய வீரர்களையும் ஒப்பந்தம் செய்துள்ளது.
ஐபிஎல் ஏலம்
கடந்த ஆண்டு ஆடிய 8 அணிகளும், 2 முதல் 4 வீரர்களை ஏற்கனவே தக்க வைத்துக் கொண்டுள்ளனர். ஐபிஎல் போட்டிகள், மார்ச் மாத இறுதியில் நடைபெறலாம் என கூறப்படும் நிலையில், இரண்டு நாள் நடைபெறும் ஐபிஎல் மெகா ஏலம், பிப்ரவரி மாதம் 13 மற்றும் 14 ஆகிய நாட்களில் நடைபெறும் என்றும் கூறப்படுகிறது.
மிக்யோ டோர்ஜி
இதற்காக சுமார் 1,200 வீரர்கள், தங்களின் பெயரை பதிவு செய்துள்ளனர். இரண்டு நாட்கள் ஐபிஎல் ஏலம் நடைபெறவுள்ளதால், எந்தெந்த அணிகள் எந்தெந்த வீரர்களைத் தேர்வு செய்யும் என்ற எதிர்பார்ப்பும் ஐபிஎல் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இந்நிலையில், பூட்டான் நாட்டில் இருந்து முதல் முறையாக, கிரிக்கெட் வீரர் ஒருவரின் பெயர், ஐபிஎல் ஏலத்துக்காக பதிவாகியுள்ளது. மிக்யோ டோர்ஜி என்ற அந்த வீரர், முதல் சுற்றில் தேர்வாகியுள்ள நிலையில், ஏலம் வரை தேர்வாவார் என்ற நம்பிக்கையும் ஒரு பக்கம் எழுந்துள்ளது.
தோனியின் அட்வைஸ்
இந்நிலையில், தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், சிஎஸ்கே அணியின் கேப்டனுமான எம்.எஸ். தோனியுடன் தான் இருக்கும் புகைப்படம் மற்றும் வீடியோ ஒன்றினை, மிக்யோ டோர்ஜி பதிவிட்டுள்ளார். கடந்த ஆண்டு தோனியை அவர் சந்தித்துள்ள நிலையில், "அனைத்தையும் எளிதாக பார். முடிவுகளை விட, செயல்பாடுகளில் அதிக கவனத்தை மேற்கொள்ள வேண்டும். அப்போது தான் சரியான முடிவுகள் கிடைக்கும். அழுத்தத்தை ஏற்றிக் கொள்ளாமல், உற்சாகத்துடன் ஆட வேண்டும்" என தோனி கூறிய அறிவுரை அப்போதிலிருந்து இப்போது வரை எனது மண்டைக்குள் ஓடிக் கொண்டே இருக்கிறது' என குறிப்பிட்டுள்ளார்.
மிகப்பெரிய கனவு
ஐபிஎல் குறித்து பேசிய மிக்யோ டோர்ஜி, 'ஐபிஎல் தொடரில் ஆடுவது என்பது எனது மிகப் பெரிய கனவாகும். ஐபிஎல் ஏல லிஸ்ட்டில், ஒரே ஒரு பூட்டான் வீரர் பெயர் இருப்பதை பார்த்து விட்டு, எனது நண்பர்கள் பலரும் அழைத்துப் பேசினர். ஆனால், இது ஆரம்ப காட்ட சுற்று தான். இந்த பெயர்களில் இருந்து, குறிப்பிட்ட வீரர்கள் மட்டுமே அடுத்த சுற்றுக்கு தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்பது அவர்களுக்கு நிச்சயம் தெரியாது.
பூட்டான் கிரிக்கெட் அணி
நேர்மையாக சொல்ல வேண்டும் என்றால், எனது பெயர் நிச்சயம் இறுதி பட்டியலில் இடம்பெறாது என்று தான் நான் கருதுகிறேன். இருந்த போதும், பெயரை பதிவு செய்வது என்பதே பூட்டானை பொறுத்த வரைக்கும் மிகப் பெரிய விஷயம் தான்' என குறிப்பிட்டுள்ளார். கடந்த 2019 ஆம் ஆண்டு, ஐசிசியின் அணிகள் பட்டியலில் இணைந்த பூட்டான், மாலத்தீவு மற்றும் நேபாளம் ஆகிய அணிகளுக்கு எதிராக கிரிக்கெட் போட்டிகள் ஆடியுள்ளது.
கவுரவம்
ஒரு வேளை, மிக்யோ டோர்ஜியின் பெயர் இறுதி பட்டியல் வரை தேர்வு செய்யப்பட்டு, ஏலம் வரையில் சென்று, அதில் வெற்றியும் பெற்றால், நிச்சயம் அது பூட்டான் கிரிக்கெட் அணிக்கு மிகப் பெரிய கவுரவமாக இருக்கும் என்றே பார்க்கப்படுகிறது.