கேப்டன் ஆகும் ஹர்திக் பாண்டியா??.. மெயின் பிக்சரே இனி தான் கண்ணா.. வெளியான அசத்தல் தகவல்
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்தாண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்காக, இரண்டு புதிய அணிகள் சேர்க்கப்பட்டுள்ள நிலையில், அதில் ஒரு அணியில் இணையவுள்ள வீரர்கள் குறித்த அசத்தல் தகவல் ஒன்று தற்போது வெளிவந்துள்ளது.

கடந்த ஆண்டு, இந்தியாவில் ஆர்மபமான ஐபிஎல் தொடர், கொரோனா தொற்றின் காரணமாக, பாதியிலே நிறுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து, மீதமுள்ள போட்டிகள், ஐக்கிய அரபு அமீரகத்தில் வைத்து நடத்தப்பட்டது.
இதில், தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ஐபிஎல் கோப்பையைக் கைப்பற்றி அசத்தியிருந்தது. இதனைத் தொடர்ந்து, 2022 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடர், ஏப்ரல் மாதம் ஆரம்பமாகலாம் என்றும் கூறப்பட்டு வருகிறது.
புதிய அணிகள்
கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில், எட்டு அணிகள் மட்டுமே பங்கேற்றிருந்த நிலையில், இந்த முறை அகமதாபாத் மற்றும் லக்னோ என இரண்டு அணிகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, ஏற்கனவே இருந்த எட்டு அணிகளும், ஐபிஎல் விதிகளுக்கு உட்பட்டு, 2 முதல் 4 வீரர்களை மட்டுமே தக்க வைத்துக் கொண்டுள்ளனர்.
3 வீரர்கள்
மற்ற வீரர்களை, வரவிருக்கும் ஐபிஎல் மெகா ஏலத்தில், அனைத்து அணிகளும் தேர்வு செய்யவுள்ளது. அதே போல, புதிய இரண்டு அணிகள், மற்ற அணிகள் விடுவித்த வீரர்களில் இருந்து, 2 இந்திய வீரர்கள் மற்றும் 1 வெளிநாட்டு வீரர் என மூன்று பேரை இந்த மெகா ஏலத்திற்கு முன்பாக வாங்கிக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய கேப்டன்
இதில், அகமதாபாத் மற்றும் லக்னோ ஆகிய அணிகள், எந்தெந்த வீரர்களை வாங்கப் போகிறார்கள் என்பது பற்றி, பல விதமான தகவல் கடந்த சில மாதங்களாக வெளிவந்த வண்ணம் இருந்தன. இந்நிலையில், அகமதாபாத் அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கிறது.
அகமதாபாத் அணி ஒப்பந்தம்
இதுகுறித்து இஎஸ்பிஎன் க்ரிக்இன்போவில் வெளியான தகவலின் படி, இந்திய வீரர்கள் ஹர்திக் பாண்டியா மற்றும் சுப்மன் கில் ஆகியோரை முறையே 15 கோடி மற்றும் 7 கோடி ரூபாய்க்கு அகமதாபாத் அணி ஒப்பந்தம் செய்ததாக கூறப்படுகிறது. வெளிநாட்டு வீரராக, ரஷீத் கானை 15 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
உறுதியான தகவல்?
கடந்த சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணியில் ஆடி வந்த ஹர்திக் பாண்டியாவை அந்த அணி நிர்வாகம் தக்க வைத்துக் கொள்ளாமல், விடுவித்தது. அதே போல, ஹைதராபாத் அணிக்காக ஆடி வந்த ரஷீத் கான் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி விடுவித்த இளம் வீரர் சுப்மன் கில் ஆகியோரை அகமாதாபாத் அணி தற்போது சொந்தம் ஆக்கியுள்ளதாக உறுதியான தகவல் தெரிவிக்கிறது.
பயிற்சியாளர்கள் யார்?
வீரர்கள் மட்டுமில்லாமல், அந்த அணியின் பயிற்சியாளர்கள் குறித்த விவரமும் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஆசிஷ் நெஹ்ரா, தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் வீரர் கேரி க்ரிஸ்டன் மற்றும் இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் விக்ரம் சோலங்கி ஆகியோர் அகமதாபாத் அணியின் பயிற்சியாளர் பணியை மேற்கொள்ளவுள்ளதாக கூறப்படுகிறது.
ரசிகர்கள் எதிர்பார்ப்பு
காயம் காரணமாக, கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக, ஹர்திக் பாண்டியா பந்து வீசாமல் இருந்து வருகிறார். மேலும், முன்பு போல, பேட்டிங்கில் கூட பெரிய அளவில், அவர் தாக்கத்தை ஏற்படுத்துவதில்லை. இதனால், இந்திய அணியில் கூட அவருக்கு வாய்ப்புகள் கிடைப்பதில் நெருக்கடி ஏற்பட்டது.
ஐபிஎல் அணியின் புதிய கேப்டன் என்ற தகவல் வெளி வரும் நிலையில், அது உறுதியானால், நிச்சயம் இந்த வாய்ப்பை தக்க முறையில் பயன்படுத்தி, தனது பழைய ஃபார்முக்கு திரும்பி, தன்னை நிரூபிப்பர் என அவரது ரசிகர்கள், மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.

மற்ற செய்திகள்
