"நோய்வாய்ப்பட்டு இருக்கும் தாயை.. மீட்டுக் கொண்டுவரப் போகும் மகளின் ஒலிம்பிக் பதக்கம்"!.. லவ்லினாவின் வலிமிகுந்த குடும்பப் பின்னணி!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்திய குத்துச் சண்டை வீராங்கனை லவ்லினா, டோக்கியோ ஒலிம்பிக் கால் இறுதி போட்டியில் வென்று, இந்தியாவுக்கு பதக்கத்தை உறுதி செய்துள்ள நிலையில், அவருடைய குடும்பப் பின்னணி அனைவரையும் கலக்கமடையச் செய்துள்ளது.

ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கான வரலாற்றை உருவாக்கியதற்காக லவ்லினாவின் வெற்றியை அவரது தந்தை டிக்கென் போர்கோஹெய்ன் மட்டுமின்றி, மொத்த கிராமமும் அவரது வீட்டு வாசலில் கொண்டாடிவருகிறது. அந்த கிராம மக்கள் லவ்லினாவின் பெயரை உச்சரித்து ஆரவாரம் செய்தனர். அவருடைய சொந்த மாநிலமான அஸ்ஸாம் விழாக்கோலம் பூண்டுள்ளது.
டோக்கியோ ஒலிம்பிக்கின் அரையிறுதிக்குள் நுழையும் மூன்றாவது இந்திய குத்துச்சண்டை வீரர் லவ்லினா போர்கோஹெய்ன் (69 கிலோ பிரிவு) ஆவார். ஏற்கனவே, 2008ம் ஆண்டு பெய்ஜிங்கில் விஜேந்தர் சிங், 2012ம் ஆண்டு லண்டன் ஒலிம்பிக்கில் மேரி கோம் ஆகியோர் பதக்கம் வெற்றுள்ளனர்.
ஆனால், லவ்லினாவின் வாழ்க்கைப்பயணம் மிகக்கடுமையானதாக இருந்துள்ளது. லவ்லினாவின் தாய் மாமோனி போர்கோஹெயினுக்கு கடந்த ஆண்டு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அந்த நேரத்தில் லவ்லினாதான் தாயை அருகில் இருந்து கவனித்துக்கொண்டார். அதன்பின் அவர் ஐரோப்பாவிற்கு 52 நாள் பயிற்சி பயணத்திற்காக, ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்ற குழுவுடன் புறப்படுவதற்கு ஒரு நாள் முன்பு கொரோனாவால் பாதிக்கப்பட்டார். லவ்லினா கோவிட்-19 இல் இருந்து மீண்ட பிறகு, அவருக்கு அசாமில் தனியாக பயிற்சி முகாம் உருவாக்க அரசும், பல தொண்டு அமைப்புகளும் உதவின.
இதுகுறித்து பேசிய லவ்லினாவின் தந்தை டிக்கென், "ஆண் குழந்தைகள் தான் பெற்றோரை சுமக்கிறார்கள் என்று மக்கள் கூறுகிறார்கள். ஆனால், நான் மூன்று மகள்களின் தந்தை என்பதில் பெருமைப்படுகிறேன். அவர்கள் எந்த பையனுக்கும் குறைவானவர்கள் அல்ல. லவ்லினாவின் தாய்க்கு சிறுநீரக செயலிழப்பு ஏற்பட்டபோது, அவர் இரவு முழுவதும் விழித்திருப்பார் என்று மிகவும் கவலைப்பட்டார்" என்று உருக்கமாக தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், "என் மனைவிக்கு இரண்டாவது வாழ்க்கை கிடைத்துள்ளது. இப்போது லவ்லினாவின் பதக்கம் நாம் எதிர்பார்த்ததை விட வேகமாக என் மனைவியை மீட்க உதவும். லவ்லினாவுக்காக நாங்கள் மேற்கொண்ட முயற்சிகள் அனைத்துக்கும் பயன் கிட்டியுள்ளது" என்று டிக்கன் உணர்ச்சி பொங்க நெகிழ்ச்சி அடைந்தார்.
இவர் கிராமத்தில் ஒரு சிறிய தேயிலை தோட்டம் வைத்திருக்கிறார். அங்குள்ள கூட்டுறவு சங்கத்தில் கடன் வாங்கியே மகள்களை போட்டிக்கு தயார் செய்துள்ளார். இவரது மற்ற இரண்டு மகள்களும் குத்துசண்டை வீராங்கனைகளாக உள்ளனர்.

மற்ற செய்திகள்
