'கூலி வேலை செய்யும் பெற்றோர்'!.. சபதம் போட்டு வீட்டை விட்டு வெளியேறி... ஒலிம்பிக்கில் சாதனை படைத்த... இந்த மீராபாய் சானு யார்?
முகப்பு > செய்திகள் > விளையாட்டுடோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் 49 கிலோ எடைப்பிரிவில் வெள்ளிபதக்கம் வென்று சாதனை படைத்துள்ள மீராபாயின் போராட்ட பின்னணி அனைவரையும் கலங்கடித்துள்ளது.
மணிப்பூர் மாநிலத்தின் இம்பால் நகரிலிருந்து 60 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள நோங்பாக் காக்சிங் தான் (Nongpok Kakching) மீராபாய் சானு பிறந்து, வளர்ந்த கிராமம் ஆகும். அவருடைய பெற்றோர், நிரந்தர வேலை ஏதுமின்றி கிடைக்கின்ற வேலையை செய்து வந்துள்ளனர். அதே கிராமத்தில் இயங்கி வந்த பள்ளியில் தனது ஆரம்பக் கல்வியை படித்துள்ளார் மீராபாய்.
ஒன்பது வயது சிறுமியாக, மீராபாய் நான்காம் வகுப்பு படித்து கொண்டிருந்தபோது விடுமுறை நாளில் டிவியில் ஸ்போர்ட்ஸ் சேனலை பார்த்து கொண்டிருந்தார். அதில் குஞ்சரணி தேவி பளு தூக்குதலில் 2004 ஒலிம்பிக்கில் அசத்திக் கொண்டிருந்தார். அதை பார்த்து தான் அவருக்கு பளு தூக்குதலில் ஆர்வம் வந்தது என மீராபாய் சானுவின் தாயார் தெரிவிக்கிறார். மேலும், அந்த போட்டி முடிந்தவுடன் இந்தியாவிற்கு, தான் பளு தூக்குதலில் பதக்கம் வென்று தருவேன் என்ற ஆர்வத்தோடு வீட்டு வாசலில் கிடந்த நீளமான மூங்கில் கோளை தலைக்கு மேல் தூக்கி விளையாடியதகவும் அவர் கூறுகிறார்.
வெறும் ஆர்வமாக மட்டுமின்றி தனது வாழ்வின் லட்சியமாக அதைக் கருதி, உழைக்கத் தொடங்குகிறார் மீராபாய். அப்போது தன் கிராமத்தில் செயல்பட்டு வந்த இளைஞர் மன்றத்திற்கு சென்று உடற்பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். கூடுதல் பயிற்சிக்காக தங்கள் கிராமத்திற்கு பக்கத்தில் இருந்த பளு தூக்கும் பயிற்சி மையத்திற்கு சைக்கிளில் பயணம் செய்து பளு தூக்கும் பயிற்சியில் ஈடுபட்டுள்ளார் மீராபாய்.
விளையாட்டில் ஈடுபடும் வீரர்கள் தங்கள் ஸ்டாமினாவை அதிகரிக்க பழம், பால், சத்து மாவு முதலியவற்றை எடுத்துக் கொள்வார்கள். ஆனால், வறுமையில் வாடிய மீராபாய்க்கு பால் கூட வாங்கி பருக முடியாத சூழல் இருந்தது. அதைத் தன் பயிற்சியாளரிடம் கூட அவர் மறைத்துள்ளார். வட்டம், மாவட்டம், மாநிலம் மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில் தனது முத்திரையை பதித்தார். 2013ல் ஜுனியர் பிரிவில் நாட்டின் சிறந்த வெயிட் லிஃப்டர் என்ற பட்டத்தை வென்றார் மீராபாய்.
அதன் பிறகு, பட்டியாலாவில் உள்ள தேசிய விளையாட்டு கழகத்தில் தங்கி பயிற்சி பெரும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. அதற்கு அவரது பெற்றோர் அனுமதி மறுக்க, "ஒலிம்பிக்கில் இந்தியா சார்பில் நான் பங்கு பெறுவேன். அந்த வாய்ப்பை இழந்தால் வீட்டுக்கே திரும்பி விடுகிறேன்" என சபதம் போட்டுவிட்டு மூட்டை முடிச்சுகளோடு வீட்டை விட்டு கிளம்பியுள்ளார்.
அங்கு தன்னுடைய குஞ்சரணி தேவிதான் அவருக்கு பயிற்சியாளர். அதன் மூலம் தேசிய போட்டிகளில் அசத்தி 2014ல் நடந்த காமன் வெல்த் போட்டிகளில் பங்குபெற வாய்ப்பு பெற்றார். அதில் இரண்டாம் இடம் பிடித்து வெள்ளிப்பதக்கம் வென்றிருந்தார் மீராபாய். அந்த வெற்றியின் மூலமாக 2016ல் நடைபெற்ற ரியோ ஒலிம்பிக்கில் பங்கேற்கும் வாய்ப்பையும் பெற்றார். ஆனால், அதில் 48 கிலோ எடைப்பிரிவில் ஆறாவது இடம் பிடித்தார்.
அமெரிக்காவில் நடந்த 2017 உலக பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டியில் 48 கிலோ எடைப்பிரிவில் 194 கிலோவை எளிமையாக தூக்கி நிறுத்தி தங்கத்தை வென்றார் மீராபாய்.
இந்நிலையில், டோக்கியோவில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்கம் வெல்வது எனது அடுத்த இலக்கு எனக் கூறிய மீராபாய்க்கு வெள்ளிப்பதக்கம் கிடைத்துள்ளது. 2020ல் நடைபெற்ற ஆசிய சாம்பியன்ஷிப்பில் மீராபாய், 49 கிலோ எடைப் பிரிவில் வெண்கலம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே, மீராபாய்க்கு பிரதமர் மோடி, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் வாழ்த்துகள் தெரிவித்துள்ளனர். பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், "மீராபாயால் இந்தியா பெருமை அடைகிறது. பளுதூக்குதலில் வெள்ளிப்பதக்கம் வென்றிருக்கும் அவருக்கு வாழ்த்துகள். அவரது வெற்றி ஒவ்வொரு இந்தியரையும் ஊக்குவிக்கிறது" எனத் தெரிவித்துள்ளார்.
அதேபோல், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், "ஒலிம்பிக்கின் முதல் நாளிலேயே இந்தியாவுக்கு ஒரு பிரகாசமான ஆரம்பம். எனது மனமார்ந்த வாழ்த்துகள் மீராபாய் சானு. தனது சிறந்த திறமையால் இந்தியாவுக்கு பளுதூக்குதலில் முதல் ஒலிம்பிக் சில்வர் பதக்கத்தை வென்றவர்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
I am really happy on winning silver medal in #Tokyo2020 for my country 🇮🇳 pic.twitter.com/gPtdhpA28z
— Saikhom Mirabai Chanu (@mirabai_chanu) July 24, 2021