'பவுண்டரி'க்கு வெளியே பறந்த 'பந்துகள்'.. ஆட்டம் காட்டிய 'தமிழக' வீரர்.. "ஐபிஎல் 'ஏலத்துல' சம்பவம் இருக்கு.."
முகப்பு > செய்திகள் > விளையாட்டுமாநிலங்களுக்கு இடையே நடைபெறும் ஒரு நாள் கிரிக்கெட் தொடரான விஜய் ஹசாரே தொடர், தற்போது காலிறுதிச் சுற்றை எட்டியுள்ளது.
இதன் முதல் போட்டியில், தமிழ்நாடு மற்றும் கர்நாடகா ஆகிய அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த தமிழ்நாடு அணி, ஆரம்பத்தில் இருந்தே சிறப்பாக ஆடி ரன் குவிக்க ஆரம்பித்தது. தொடக்க வீரரான ஜெகதீசன் சதமடித்து அசத்தியிருந்தார். இதனைத் தொடர்ந்து, சுழற்பந்து வீச்சாளர் சாய் கிஷோர், பேட்டிங்கில் பட்டையைக் கிளப்பினார்.
40 ஓவர்களில், தமிழக அணி, 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 252 ரன்கள் எடுத்திருந்தது. இதன் பிறகு களம் கண்ட அதிரடி வீரர் ஷாருக்கான், ஆரம்பத்தில் நிதானமாக ரன்களை எடுத்தார். 20 பந்துகளில் 17 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார் ஷாருக்கான். ஆனால், போக போக போடும் பந்துகள் எல்லாம் பவுண்டரி லைனை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. சிக்ஸர், பவுண்டரிகள் என ருத்ர தாண்டவம் ஆடிய ஷாருக்கான், 39 பந்துகளில் 7 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்களுடன் 79 ரன்கள் குவித்தார். ஐம்பது ஓவர்கள் முடிவில் தமிழக அணி, 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 354 ரன்கள் எடுத்து.
தொடர்ந்து ஆடிய கர்நாடக அணி, 203 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில், 151 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தமிழக அணி, அரையிறுதி சுற்றை எட்டியது. தமிழகத்தைச் சேர்ந்த அதிரடி வீரர் ஷாருக்கான், இந்தாண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்காக ஆடியிருந்தார். தனக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்ட அவர், தனக்கே உரித்தான அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி, கிரிக்கெட் அரங்கைத் திரும்பி பார்க்க வைத்தார்.
அது மட்டுமில்லாமல், சமீபத்தில் சையது முஷ்டாக் அலி தொடரின் இறுதி போட்டியில், தமிழக அணியின் வெற்றிக்கு 5 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது பேட்டிங் செய்த ஷாருக்கான், அதனை சிக்ஸராக மாற்ற, தமிழக அணி அசத்தலாக வென்று, கோப்பையைக் கைப்பற்றியிருந்தது.
அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில், மொத்தம் 10 அணிகள் பங்கேற்கவுள்ள நிலையில், ஏற்கனவே ஆடி வரும் 8 அணிகள், விதிகளின் படி, சில வீரர்களை மட்டும் தக்க வைத்துக் கொண்டது. மீதமுள்ள வீரர்களை அடுத்த ஆண்டு நடைபெறும் ஐபிஎல் ஏலத்தில் தேர்வு செய்யவுள்ளனர். பஞ்சாப் அணி ஷாருக்கானை தக்க வைத்துக் கொள்ளாத நிலையில், அவரது அதிரடி ஆட்டம், போட்டிக்கு போட்டி வலுபெற்று வருகிறது. இதனால், அவரை ஏலத்தில் எடுக்க நிச்சயம் அனைத்து அணிகளுக்கிடையே கடும் போட்டி நிலவும் என்றே தெரிகிறது.
அதே போல, சில தினங்களுக்கு முன், தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, தவான், அஸ்வின், ஷாருக்கான் உள்ளிட்ட வீரர்களை ஏலத்தில் எடுக்கப் போவதாகவும், தகவல்கள் வெளியாகியிருந்தது. அப்படி ஒரு வேளை, தமிழக வீரர் ஷாருக்கானை சென்னை அணி ஏலத்தில் எடுத்தால், சிஎஸ்கே ரசிகர்களின் நிலை என்னவாக இருக்கும் என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை.