'ஐபிஎல் 2022' மெகா ஏலம் எப்போது நடைபெறும்?.. வெளியான 'லேட்டஸ்ட்' தகவல்..
முகப்பு > செய்திகள் > லைப்ஸ்டைல்2021 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரின் இரண்டாம் பாதி, ஐக்கிய அரபு அமீரகத்தில் வைத்து நடைபெற்றிருந்த நிலையில், தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, நான்காவது முறையாக ஐபிஎல் கோப்பையைக் கைப்பற்றி அசத்தியிருந்தது.

இதனைத் தொடர்ந்து, அடுத்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் மீதான எதிர்பார்ப்பு தற்போதே எகிறியுள்ளது. இதற்கு மிக முக்கிய காரணம், அடுத்த சீசனில் இரண்டு அணிகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது தான். இதுவரை 8 அணிகள் ஐபிஎல் போட்டியில் பங்கேற்று வந்த நிலையில், அடுத்த ஆண்டில் லக்னோ மற்றும் அகமதாபாத் என இரண்டு புதிய அணிகள் சேர்க்கப்பட்டுள்ளது.
மொத்தம் 10 அணிகள் பங்குபெறவுள்ளதால், அடுத்த சீசனுக்கு முன்பாக மெகா ஏலம் நடைபெறவுள்ளது. இதற்கு முன்பாக, மொத்தம் 8 அணிகள் தாங்கள் தக்க வைத்துக் கொண்டுள்ள வீரர்களின் பட்டியலை வெளியிட்டிருந்தது. மொத்தம் 27 வீரர்களை எட்டு அணிகளும் தக்க வைத்துள்ள நிலையில், இதில் 19 இந்திய வீரர்களும், 8 வெளிநாட்டு வீரர்களும் அடங்குவர்.
அதே போல, புதிதாக வந்துள்ள இரு அணிகளும், ஐபிஎல் 2022 க்கு முன்பாக, மற்ற அணிகள் வெளியேற்றிய வீரர்களில் இருந்து 3 பேரை ஏலத்திற்கு முன்பாகவே வாங்கிக் கொள்ளலாம் என்றும் கூறப்படுகிறது. அடுத்த ஆண்டு ஐபிஎல் ஏலம் மற்றும் தொடர் மீதான எதிர்பார்ப்பு, நாளுக்கு நாள் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வரும் நிலையில், ஜனவரி மாதம் மெகா ஏலம் நடைபெறலாம் என தகவல்கள் வெளியாகியிருந்தது.
ஆனால், தற்போது இந்த ஏலம் தள்ளிப்போவதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றது. பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் ஐபிஎல் மெகா ஏலம் நடைபெறலாம் என்றும், 2018 ஆம் ஆண்டில் நடைபெற்றது போல, இரண்டு நாட்களாக பிரித்து நடத்தப்படலாம் என்றும் கூறப்படுகிறது. புதிய அணிகளுக்கான ஏலம் துபாயில் நடைபெற்றிருந்த நிலையில், வீரர்களுக்கான ஏலம் இந்தியாவில் வைத்து நடைபெறவுள்ளது.
இதற்காக, பெங்களூர் மற்றும் ஹைதராபாத் நகரங்களில் உள்ள தனியார் ஹோட்டல்களில் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் தெரிகிறது. இவை அனைத்தும் இறுதியான பிறகு, அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகலாம் என கூறப்படுகிறது.

மற்ற செய்திகள்
