ரவிசாஸ்திரி பேசிய ஒற்றை வார்த்தை.. நொறுங்கிப் போன அஸ்வின்.. வெளிவந்த உண்மை..
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்திய கிரிக்கெட் அணியின் தலைச் சிறந்த சுழற்பந்து வீச்சாளராக தற்போது வலம் வருபவர் ரவிச்சந்திரன் அஸ்வின்.
குறிப்பாக, டெஸ்ட் போட்டிகளில் மிகச் சிறப்பாக பந்து வீசி வரும் அஸ்வின், பல ஜாம்பவான்களின் சாதனைகளையும் ஒவ்வொன்றாக தகர்த்து வருகிறார். உலக அரங்கில் சிறந்தவொரு டெஸ்ட் சுழற்பந்து வீச்சாளராக பார்க்கப்படும் அஸ்வின், தனது கிரிக்கெட் கேரியரில் ஏற்றங்கள் மட்டுமே கண்டவரல்ல.
கடந்த 2017 ஆம் ஆண்டுக்கு பிறகு, சாஹல் மற்றும் குல்தீப் யாதவ் ஆகிய சுழற்பந்து வீச்சாளர்களின் வருகையால், ஒரு நாள் மற்றும் டி 20 போட்டிகளில், அஸ்வினுக்கு அதிகம் வாய்ப்பு கிடைக்காமல் போனது. தொடர்ந்து, வெளிநாட்டு மைதானங்களில் நடைபெறும் டெஸ்ட் போட்டிகளிலும் அஸ்வினுக்கு நேர் வர வாய்ப்பு கிடைக்கவில்லை. இருந்த போதும், தனது விடாமுயற்சியால், தன்னை கவனிக்க வைத்த அஸ்வின், தற்போது டெஸ்ட் போட்டிகளில் மீண்டும் களமிறங்கி அசத்தி வருகிறார். அது மட்டுமில்லாமல், டி 20 உலக கோப்பைத் தொடரிலும் அவர் இடம்பெற்றிருந்தார்.
இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி மூலம் தான் வேதனையடைந்தது பற்றி, அஸ்வின் முதல் முறையாக மனம் திறந்து பேசியுள்ளார். 2019 ஆம் ஆண்டின் போது, ஆஸ்திரேலியாவில் வைத்து நடைபெற்ற டெஸ்ட் போட்டி ஒன்றில், இந்திய சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ், 5 விக்கெட்டுகள் எடுத்து அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றியிருந்தார்.
அப்போது இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்த ரவி சாஸ்திரி, குல்தீப் யாதவை பாராட்டிப் பேசினார். 'ஒவ்வொருவருக்கும் தக்க சமயம் வரும். ஆனால், இப்போது குல்தீப்பிற்கான காலம் தொடங்கி விட்டது. அவர் தான் தற்போதைய இந்திய அணியின் சிறந்த அயல்நாட்டு ஸ்பின்னர்' என அஸ்வினை மறைமுகமாக குறிப்பிட்டு பேசினார். இந்நிலையில், இதுபற்றி தற்போது பேசிய அஸ்வின், 'ரவி சாஸ்திரி மீது எனக்கு அதிக மதிப்பு உள்ளது. இங்கு அனைவருக்கும் கருத்து கூறவும், பின் அதனை திரும்ப பெறவும் உரிமை உள்ளது. இருந்த போதும், ரவி சாஸ்திரி அப்போது அப்படி தெரிவித்ததால் நான் மனம் நொறுங்கி போனேன். முற்றிலுமாக உடைந்து போனேன்.
சக வீரரின் வெற்றியில் மகிழ்ச்சி கொள்பவன் தான் நான். அந்த வகையில், குல்தீப்பிற்காக நான் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். ஆஸ்திரேலியாவில் ஐந்து விக்கெட்டுகளை நான் எடுத்ததில்லை. பல போட்டிகளில், நான் சிறப்பாக பந்து வீசிய போதும், அங்கு 5 விக்கெட்டுகளை எடுத்ததில்லை. ஆஸ்திரேலியாவில் 5 விக்கெட்டுகளை எடுப்பது சாதாரணமல்ல. ஆனால், அதனை குல்தீப் நிகழ்த்திக் காட்டினார்.
குல்தீப் மகிழ்ச்சியிலும், அணியின் வெற்றி கொண்டாட்டத்திலும் பங்கு பெற்றுக் கொண்டால் தான், நானும் ஒரு நாள் வெற்றி பெற முடியும். ஆனால், நானும் தூக்கி எறியப்பட்டதாக நினைத்தால், எப்படி கொண்டாட்டத்தில் கலந்து கொள்ள முடியும்?. எனது அறைக்கு சென்ற நான், மனைவியிடம் உரையாடி ஆறுதல் அடைந்தேன். பிறகு, மீண்டும் அணி வீரர்களுடன் வெற்றியைக் கொண்டாடினேன்' என அஸ்வின் தெரிவித்துள்ளார்.