'யம்மாடியோவ்..! என்னா அடி..!'- கோலிக்கு நிகரான சாதனையை அசால்ட்டாகப் பதிவு செய்த ருதுராஜ்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஐபிஎல் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருபவர் ருதுராஜ் கெய்க்வாட்.

யாரும் எதிர்பாராத விதமாக சென்ற சீசனுக்கு முந்தைய சென்னை அணிக்காக தொடர்ந்து மூன்று அரை சதங்கள் அடித்து பலரவது கவனத்தையும் ஈர்த்தார் ருதுராஜ். தொடர்ந்து இந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரிலும் தனது ஃபார்மை தொடர்ந்து ரன் மழை பொழிந்தார். இந்த ஆண்டு சி.எஸ்.கே, ஐபிஎல் கோப்பையை வெல்ல முக்கிய காரணமாக அமைந்தார் ருதுராஜ்.
இந்நிலையில் ருதுராஜ், மகராஷ்டிர அணிக்குத் தலைமை தாங்கி விஜய் ஹசாரே போட்டிகளில் தற்போது விளையாடி வருகிறார். இதுவரை மகாராஷ்டிரா, 5 போட்டிகளில் விளையாடியுள்ள நிலையில் 4 சதங்கள் அடித்து சாதனை புரிந்துள்ளார் ருதுராஜ்.
கடைசியாக மகாராஷ்டிரா, சண்டிகரை அணியை எதிர்த்து குருப் டி பிரிவில் விளையடியது. இந்தப் போட்டியானது ராஜ்கோட்டில் உள்ள சவுராஷ்டிரா கிரிக்கெட் மைதானத்தில் நடந்தது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சண்டிகர், 50 ஓவர்கள் முடிவில் 309 ரன்கள் குவித்தது.
310 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் களம் கண்டது மகாராஷ்டிரா. ஓப்பனர்களில் ஒருவராக இறங்கிய கேப்டன் ருதுராஜ், ஆரம்பம் முதலே அதிரடி காண்பித்தார். அவர் மொத்தமாக 168 ரன்கள் குவித்து அணியின் வெற்றிக்கு வழி வகுத்தார். கடைசியாக மகாராஷ்டிரா, 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சண்டிகரை வீழ்த்தியது.
இதுவரை ருதுராஜ் மத்தியப் பிரதேச அணிக்கு எதிராக 136, சட்டிஸ்கர் அணிக்கு எதிராக 154, கேரள அணிக்கு எதிராக 124 மற்றும் உத்தரகாண்ட் அணிக்காக 24 ரன்கள் குவித்துள்ளார். சண்டிகர் அணிக்கு எதிராக மீண்டும் சதம் அடித்தது மூலம் லிஸ்ட் ஏ போட்டிகளில் மொத்தமாக 11 சதங்கள் விளாசி அசத்தியுள்ளார் ருதுராஜ். விஜய் ஹசாரே தொடரைப் பொறுத்தவரை, அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் 603 ரன்களுடன் முதல் இடத்தில் இருக்கிறார் ருதுராஜ் கெய்க்வாட். அவரைத் தொடர்ந்து மத்தியப் பிரதேச அணியைச் சேர்ந்த வெங்கடேஷ் ஐயர், இரண்டாம் இடத்தில் இருக்கிறார்.
இதுவரை விஜய் ஹசாரே தொடரைப் பொறுத்தவரை விராட் கோலி, பிரித்வி ஷா மற்றும் தேவ்தத் படிக்கல் ஆகியோர் தான் ஒரே சீசனில் அதிக சதங்கள் அடித்த வீரர்களின் சாதனைப் பட்டியலில் இடம் பிடித்துள்ளனர். இவர்கள் அனைவரும் ஒரே சீசனில் அதிகபட்சமாக 4 சதங்கள் கடந்து அசத்தியுள்ளனர். தற்போது அந்தப் பட்டியலில் ருதுராஜும் இணைந்துள்ளார். இந்த ஆண்டு விஜய் ஹசாரே தொடரில் இன்னும் சில போட்டிகள் மீதம் இருக்கும் நிலையில், முந்தையவர்களின் சாதனையை முறியடிக்கும் வாய்ப்பும் ருதுராஜுக்கு இருக்கிறது.
வரும் ஜனவரி 19 ஆம் தேதி, தென் ஆப்ரிக்க அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை ஆரம்பிக்கிறது இந்திய கிரிக்கெட் அணி. இந்த தொடரில் தனக்கு இடம் தர வேண்டும் என்று தனது ஆட்டம் மூலம் டிமாண்ட் செய்துள்ளார் ருதுராஜ். இந்த ஒருநாள் தொடரிலிருந்து முன்னாள் கேப்டன் விராட் கோலி விலக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. அவர் விலகும் பட்சத்தில், ருதுராஜ் கெய்க்வாட் சரியான மாற்றாக இருப்பார் என்று சொல்லப்படுகிறது.

மற்ற செய்திகள்
