‘கோப்பையை வென்ற இங்கிலாந்து அணி பயிற்சியாளர்’... ‘எந்த ஐபிஎல் அணிக்கு நியமனம்??’
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Sangeetha | Jul 18, 2019 11:38 PM
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக, இங்கிலாந்து அணிக்கு உலகக் கோப்பையை வென்றுகொடுத்த, டிரெவர் பேலிஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

கொல்கத்தா நைட்ரைடர்ஸ் ஐபிஎல் அணியின் பயிற்சியாளராக நியமிக்க, கடந்த சில நாட்களாக டிரெவர் பேலிஸ், பெயர் அடிபட்டு வந்தது. இந்நிலையில், தற்போது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் பயிற்சியாளராக, டிரெவர் பேலிஸ் நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த 7 சீசன்களாக இருந்துவந்த டாம் மூடிக்குப் பதிலாக, டிரெவர் பேலிஸ் புதிய தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
டிரெவர் பேலிஸ் தலைமையில் இங்கிலாந்து அணி இப்போதுதான் உலக கோப்பையை வென்று சாதனை படைத்தது. இங்கிலாந்து அணியின் பயிற்சியாளராக இருந்துவரும் டிரெவர் பேலிஸின் பதவிக்காலம், ஆஷஸ் தொடருடன் முடிவடையவுள்ளது. அதற்குப் பிறகுஇங்கிலாந்து அணியின் பயிற்சியாளராக நீடிக்கப்போவதில்லை என்று அவர் அறிவித்துள்ளார்.
டிரெவர் பேலிஸ், ஏற்கனவே கேகேஆர் அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்திருக்கிறார். இவர் பயிற்சியாளராக இருக்கும்போதுதான், கேகேஆர் அணி 2 முறை கோப்பையை வென்றது. ஐபிஎல்லில் வெற்றிகரமான பயிற்சியாளராக திகழ்ந்த பேலிஸ், இங்கிலாந்துக்கு கோப்பையை வென்று கொடுத்த நிலையில், தற்போது தனது பயிற்சியாளர் பணியை சன்ரைசர்ஸ் அணிக்கு வழங்கவுள்ளார்.
