'பும்ரா', நடராஜனுக்கு இடையே இருக்கும் 'ஒற்றுமை'... பக்காவா 'பட்டியல்' போட்ட 'சேவாக்'... "அப்போ 'நடராஜன்' பட்டைய கெளப்ப போறாரோ??..." எதிர்பார்ப்பில் 'ரசிகர்'கள்!!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஆஸ்திரேலியா அணிக்கு எதிராக இன்று நடைபெற்ற முதல் டி 20 போட்டியில் இந்திய அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றிருந்தது.

இதற்கு முன்னர் நடைபெற்ற ஒரு நாள் தொடரை இந்திய அணி இழந்திருந்த நிலையில், அதன் கடைசி போட்டியில் தமிழக வீரர் நடராஜன் களமிறங்கியிருந்தார். ஐபிஎல் தொடரில் யார்க்கர் பந்துகளால் கவனம் ஈர்த்த நடராஜனுக்கு ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரில் இடம் கிடைத்தது.
ஒரு நாள் போட்டியில், தான் ஆடிய முதல் போட்டியிலேயே இரண்டு விக்கெட்டுகளை எடுத்து நடராஜன் அசத்தியிருந்தார். தமிழகம் மட்டுமல்லாது, உலகெங்கிலுமுள்ள கிரிக்கெட் ரசிகர்கள் நடராஜனுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர். தமிழகத்தின் சேலம் மாவட்டத்தில் ஒரு கிராமத்தில் இருந்து வந்து இன்று சாதித்துக் காட்டிய நடராஜனுக்கு இன்று நடைபெற்ற டி 20 போட்டியிலும் அணியில் இடம் கிடைத்தது.
இன்றும் தனக்கு கிடைத்த வாய்ப்பை கச்சிதமாக பயன்படுத்திக் கொண்ட நடராஜன், 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அதிலும் குறிப்பாக, ஆஸ்திரேலியா அணியின் அதிரடி வீரர் மேக்ஸ்வெல் விக்கெட்டையும் அவர் கைப்பற்றினார். தனது தொடக்க போட்டிகளிலேயே மிகச் சிறப்பாக செயல்பட்டு வரும் நடராஜன் மற்றும் இந்திய அணியின் நட்சத்திர பவுலராக உள்ள பும்ரா ஆகியோருக்கு இடையேயுள்ள ஒற்றுமையை இந்திய அணியின் முன்னாள் வீரர் சேவாக் பட்டியலிட்டுள்ளார்.
இதில், 'இருவருமே இந்திய அணியில் இடம்பெற்று காயமடைந்த வீரருக்கு மாற்று வீரர்களாக அணியில் இடம் பிடித்தவர்கள். அதே போல இருவரும் ஒரு நாள் போட்டி மற்றும் டி 20 போட்டிகளில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக தான் களமிறங்கினர். ஒரு நாள் போட்டித் தொடரின் கடைசி போட்டியில் தான் அறிமுகம் ஆகினர். இருவர் களமிறங்கிய முதல் ஒரு நாள் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றிருந்தது. அதே போல, தங்களது முதல் ஒரு நாள் போட்டியில் 2 விக்கெட்டுகளை இருவரும் கைப்பற்றியிருந்த நிலையில், தங்களது முதல் டி 20 போட்டியில் 3 விக்கெட்டுகளை எடுத்துள்ளனர்.'
பும்ராவை போல நடராஜனும் திறமையான பந்து வீச்சாளராக உருவானால், இந்திய அணியில் அபாயகரமான வேகப்பந்து தாக்குதல் உருவாகும்' என சேவாக் குறிப்பிட்டுள்ளார்.

மற்ற செய்திகள்
