'இதுக்காக ரொம்ப கெஞ்ச வேண்டியிருந்தது'... 'மனம் திறந்த பிரபல வீரர்'
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Sangeetha | Sep 26, 2019 05:48 PM
இந்திய அணியின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தோல்வியை கண்டு துவழக் கூடாது என்பதற்காக வீடியோ ஒன்றின் மூலம் தான் பட்ட கஷ்டங்களை தெரிவித்துள்ளார்.

கிரிக்கெட் உலகின் ஜாம்பவானாக இருப்பவர் சச்சின் டெண்டுல்கர். சர்வதேச அரங்கில் அவரின் சாதனைகள் எண்ணற்றவை. இந்நிலையில் ஜாம்பவான் சச்சின் லிங்டுஇன்னில் வீடியோ ஒன்றை வெளியீட்டுள்ளார். நியூசிலாந்துக்கு எதிரானப் ஒருநாள் போட்டியில், ஆக்லாந்தில் நடைப்பெற்ற சம்பவத்தை அவர் பகிர்ந்துள்ளார். அதில், ‘கடந்த 1994-ம் ஆண்டு இந்திய அணிக்காக, முதன்முதலாக துவக்க வீரராக களமிறங்கினேன்.
அப்போது விக்கெட்டை முதலில் காப்பாற்றுவதே, எல்லா அணிகளின் உத்தியாக இருந்தது. ஆனால் நான் அதிலிருந்து மாறுபட்ட கோணத்தில் யோசித்தேன். துவக்க வீரராக களமிறங்கி, எதிரணி பவுலர்களை திணறடிக்க செய்யவேண்டும் என நினைத்தேன். ஆனால் துவக்க வீரராக களமிறங்க கெஞ்சி, கூத்தாட வேண்டியிருந்தது. துவக்க வீரராக களமிறங்கி, ஒருவேளை நான் தோல்வியடைந்தால் மீண்டும் வர மாட்டேன் என உறுதியளித்தேன்’ என்று அந்த வீடியோவில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் ‘துவக்க வீரராக களமிறங்கிய முதல் போட்டியில், நியூசிலாந்துக்கு எதிராக 49 பந்தில் 82 ரன்கள் எடுத்தேன். அதனால் மீண்டும் இதேபோல் சென்று கேட்க வேண்டிய அவசியம் ஏற்படவில்லை. அதற்கு பின் அவர்களே என்னை துவக்க வீரராக களமிறக்க ஆர்வம் காட்டினர். இதை எதற்காக இங்கே குறிப்பிடுகிறேன் என்றால், தோல்வியைக் கண்டு எப்போதும் அஞ்சக்கூடாது’ என்று அந்த வீடியோவில் சச்சின் தெரிவித்துள்ளார். மிடில் ஆர்டரில் தனது கிரிக்கெட் வாழ்க்கையை துவங்கிய சச்சின், துவக்க வீரராக களமிறங்கி பல வெற்றிகளை தேடி தந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
