‘இது புது ஃபேஷன் ஆகிடுச்சு’.. ‘கடவுள்தான் காப்பாத்தணும்..’ பிசிசிஐ-யை விளாசித் தள்ளிய கங்குலி..
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Saranya | Aug 07, 2019 12:29 PM
பிசிசிஐ இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ராகுல் ட்ராவிடுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளதை ட்விட்டரில் சவுரவ் கங்குலி கடுமையாகச் சாடியுள்ளார்.

ராகுல் ட்ராவிட் லாபம் தரும் இரண்டு பதவிகளில் உள்ளாரா என விளக்கம் கேட்டு பிசிசிஐ கிரிக்கெட் ஆலோசனைக் கமிட்டி அவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில் தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவராக உள்ள ராகுல் ட்ராவிட், இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் துணைத் தலைவராகவும் உள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இதற்கு வரும் ஆகஸ்ட் 16ஆம் தேதிக்குள் அவர் உரிய விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் அதில் கூறப்பட்டுள்ளது.
இதற்கு முன்னதாக பிசிசிஐ கிரிக்கெட் ஆலோசனைக் கமிட்டியில் இருந்து கொண்டு, மும்பை இந்திய அணியின் ஐகானாகவும் செயல்படுவதாக சச்சின் மீதும் இதே குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பின்னர் அவர் மும்பை இந்தியன்ஸ் அணியில் ஒரு வழிகாட்டியாக மட்டுமே செயல்படுவதாகவும், அதற்காக எந்தவித பலனையும் பெறுவதில்லை எனவும் விளக்கமளித்த பின்னரே அந்த பிரச்சனை முடிவுக்கு வந்தது. இதேபோல ஏற்கெனவே கங்குலி, விவிஎஸ் லஷ்மன் ஆகியோருக்கும் பிசிசிஐ நோட்டீஸ் அனுப்பியுள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இதுபற்றி ட்விட்டரில் காட்டமாகக் கருத்து தெரிவித்துள்ள கங்குலி, “இந்திய கிரிக்கெட்டில் இது ஒரு ஃபேஷனாகி விட்டது. எப்போதும் செய்திகளில் இடம்பிடிக்க இது ஒரு சிறந்த வழி. கடவுள்தான் இந்திய கிரிக்கெட்டை காப்பாற்ற வேண்டும்” எனக் கூறியுள்ளார்.
New fashion in indian cricket .....conflict of interest ....Best way to remain in news ...god help indian cricket ......Dravid Gets Conflict of Interest Notice from BCCI Ethics Officer https://t.co/3cD6hc6vsv.
— Sourav Ganguly (@SGanguly99) August 6, 2019
