‘அடுத்த ஆண்டு ஒலிம்பிக்’... ‘பிபா உலகக் கோப்பையில்’... ‘விளையாட முடியாது’... ‘ரஷ்யாவுக்கு 4 ஆண்டுகள் தடை’!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Sangeetha | Dec 09, 2019 10:10 PM
ரஷ்யா சர்வதேச விளையாட்டு போட்டிகளில் அடுத்த 4 ஆண்டுகள் பங்கேற்க, உலக ஊக்க மருந்து தடுப்பு ஏஜென்சி தடை விதித்துள்ளது.
கடந்த 2014-ம் ஆண்டு ரஷ்யாவின் சோச்சி நகரில், குளிர்கால ஒலிம்பிக் போட்டி நடந்தபோது, அந்நாட்டின் வீரர்கள் பலர் ஊக்கமருந்து உட்கொண்டதாக சர்ச்சை கிளம்பியது. இதற்கு அந்நாட்டு அரசே உடந்தையாக இருந்ததாக கூறப்பட்டது. இதனையடுத்து, ரஷ்யாவுக்கு போட்டிகளில் பங்கேற்க, கடந்த 2015 நவம்பரில் 15 மாதம் தடை விதிக்கப்பட்டது. இதனால் 2016-ம் ஆண்டு நடந்த ரியோ ஒலிம்பிக்கில் ரஷ்ய தடகள வீரர்கள், ஊக்க மருந்து சோதனைக்குப்பின் ஒலிம்பிக் கொடியின் கீழ் விளையாட அனுமதிக்கப்பட்டனர்.
அதன்பின்னர் ஊக்க மருந்து சர்ச்சை குறித்து, உலக ஊக்க மருந்து தடுப்பு ஏஜென்சி (WADA) சார்பில் 3 பேர் கொண்ட குழு, விசாரணை செய்தது. இதில், ரஷ்ய ஆய்வகத்தில் நடத்தப்பட்ட ஊக்கமருந்து சோதனைகள் எதிலும் நம்பகத்தன்மை இல்லை என்றும், அங்கு நடத்தப்பட்ட சோதனைகளின் மாதிரிகள் திட்டமிட்டு அழிக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டது. மேலும், ரஷ்ய நாட்டின் ஊக்க மருந்து சோதனை அமைப்பு (ருசாடா), ஆய்வக முடிவுகளை திருத்தம் செய்து விசாரணை அதிகாரிகளிடம் ஒப்படைத்தது எனவும் குற்றச்சாட்டு எழுந்தது.
இந்நிலையில் சுவிட்சர்லாந்தின் லாசேன் நகரில் WADA, செயற்குழு கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில், WADA விசாரணை குழுவின் பரிந்துரையை ஏற்று, ரஷ்யாவுக்கு 4 ஆண்டு தடை விதிக்க ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது. இதனால் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள்(2020), கத்தாரில் நடைபெறும் 'பிபா' உலகக் கோப்பை கால்பந்து (2022), பீஜிங் குளிர் கால ஒலிம்பிக் (2022) உள்ளிட்ட முக்கியப் போட்டிகளில் ரஷ்ய வீரர்கள் பங்கேற்க முடியாது.
எனினும் இத்தடைக்கு எதிராக ரஷ்யா சார்பில் 21 நாட்களுக்குள் மேல்முறையீடு செய்து கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது. மேலும், ரஷ்ய வீரர்கள் ஊக்கமருந்து பயன்படுத்தவில்லை என்பதை நிரூபிக்கும் பட்சத்தில், ஒலிம்பிக் கொடியின் கீழ் அந்தந்தப் போட்டிகளில் பங்கேற்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.