ஓடுதளத்தில் தீப்பிடித்து ஓடிய விமானம்.. 2 குழந்தைகள் உள்பட 41 பேர் பலி.. பதைபதைக்க வைக்கும் அலறல் வீடியோ!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Sangeetha | May 06, 2019 10:49 AM

ரஷ்யாவின் மாஸ்கோ விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட விமானம் ஒன்று, புறப்பட்ட சில நிமிடங்களில் தீப்பிடித்து விபத்துக்குள்ளானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

russian airport plane crash 41 passengers dead including 2 children

இந்திய நேரப்படி காலை 3 மணியளவில் கிளம்பிய சூப்பர்ஜெட் விமானத்தில், 78 பயணிகள் மற்றும் 5 விமான பணியாளர்கள் இடம்பெற்றிருந்தனர். மாஸ்கோவின் ஷெர்மெட்யெவோ விமான நிலையத்தில் இருந்து விமானம் கிளம்பிய சிறிது நேரத்தில், விமானத்தில் கோளாறு இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து விமான கட்டுப்பாட்டு அறையின் உதவியோடு விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

தரையிறங்கிய விமானம் ஓடு பாதையில் சென்று கொண்டிருக்கும் போதே, திடீரென தீப்பற்றி எரியத் தொடங்கியது. இதையடுத்து விமானத்தின் அவசர வழி மூலமாக பயணிகள் வெளியேற்றப்பட்டனர். எனினும் மளமளவென தீ வேகமாக பரவத் தொடங்கியதால், விமானத்தில் பயணம் செய்தவர்களில் 2 குழந்தைகள் உட்பட 41 பேர் பலியானதாக தகவல் வெளியாகி இருக்கிறது. 11 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

விமானம், ஓடுதளத்தில் பயங்கர தீயுடன் தரையிறங்கும் காட்சிகள், தற்போது இணையங்களில் பரவிவருகின்றன. இந்நிலையில், விமானம் தரையிறங்குவதற்கு முன்னதாக, அந்தப் பகுதியில் இரண்டு முறை வட்டமிட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. உடனடியாகத் தரை இறங்க அனுமதி மறுக்கப்பட்டதா என்ற கோணத்திலும் விசாரணை நடைபெறுகிறது.

அதேபோல் இந்த விபத்து எப்படி ஏற்பட்டது என்று பயணி ஒருவரும் வீடியோ வெளியிட்டுள்ளார். விமானத்தின் உட்பக்கத்தில் இருந்து அவர் இந்த வீடியோவை எடுத்துள்ளார். ஜன்னல் வழியாக எப்படி தீ பிடித்தது என்பதை படமாக்கி இருக்கிறார். அதில் பெண் பயணிகள் உள்பட பலரின் அலறல் சத்தம் பதைபதைக்க வைக்கிறது.

Tags : #PLANECRASH #RUSSIA #SUKHOI100