‘காற்றில் அணையாத ஜோதி’.. கலக்கும் ஜப்பான்.. களைகட்டும் ஒலிம்பிக் 2020!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Arunachalam | Mar 21, 2019 07:34 PM
விளையாட்டில் சாதிக்க நினைக்கும் வீரர்களின் ஒரே கனவு ஒலிம்பிக் போட்டியாகும். அத்தகைய மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒலிம்பிக் போட்டி நான்கு வருடத்திற்கு ஒருமுறை நடத்தப்படும். இம்முறை வரும் 2020 ஆம் ஆண்டு ஜப்பான் நாட்டின் தலைநகரமான டோக்கியோவில் தொடங்கவிருக்கிறது.
இத்தகைய சிறப்பு வாய்ந்த ஒலிம்பிக் போட்டியின் துவக்கத்தில் ஒலிம்பிக் ஜோதி ஏற்றப்படும்.அதற்காக பிரத்யேக வடிவில் புதிய ஒலிம்பிக் டார்ச் ஒன்றை ஜப்பான் வடிவமைத்துள்ளது.
இந்த டார்ச்சை ஜப்பானை சேர்ந்த டோக்யூஜின் யோஷியோகா வடிவமைத்துள்ளார்.இந்த டார்ச் ஜப்பானின் புல்லட் ரயில் உருவாக்கப்படும் அதே பொருளால் தயாரிக்கப்பட்டுள்ளது. இது 71 செண்டிமீட்டர் நீளமும், 1.2 கிலோ எடையும் கொண்டுள்ளது.இந்த டார்ச்சின் மேல் பகுதி ஜப்பானின் பிரபலமான ‘சக்குரா’ (செர்ரி பிளாசம்) வடிவத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த டார்ச்சில் இருக்கும் ஜோதி காற்றினால் அணையாத வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இத்தகைய சிறப்பம்சம் கொண்ட டார்ச்சை பார்வையற்ற மாற்றுதிறனாளிகளும் கையாளும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஒலிம்பிக் ஜோதி ஓட்டம் வரும் 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 26 ஆம் தேதி தொடங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.