"விராட் அடிச்ச அந்த ஒரு அடி".. மிரண்டு பார்த்துட்டு உற்சாகத்தில் ரோஹித் கொடுத்த ரியாக்ஷன்!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் தொடர் தற்போது நடந்து முடிந்துள்ளது. முதலில் நடந்த டி 20 போட்டியை இந்திய அணி 2 - 1 என்ற கணக்கில் கைப்பற்றி இருந்தது.
இதற்கடுத்து 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரும் நடந்தது. இதில், முதல் 2 போட்டிகளில் வென்ற இந்திய அணி தொடரை கைப்பற்றி இருந்தது.
இதனைத் தொடர்ந்து, மூன்றாவது ஒரு நாள் போட்டி, நேற்று (15.01.2023) நடைபெற்றிருந்தது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, ஆரம்பத்தில் இருந்தே அதிரடியாக ஆடி ரன்கள் எடுத்தது. தொடக்க வீரர் சுப்மன் கில் 116 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதன் பின்னர், இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி, பட்டையைக் கிளப்பி இருந்தார். முதல் ஒரு நாள் போட்டியில் சதமடித்திருந்த நிலையில், மூன்றாவது ஒரு நாள் போட்டியிலும் சதமடித்திருந்தார்.
அது மட்டுமில்லாமல், 150 ரன்களைக் கடந்த கோலி, 166 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார். 110 பந்துகளில், 13 ஃபோர்கள் மற்றும் 8 சிக்ஸர்களுடன் இந்த ரன்னை கோலி எட்டி இருந்த நிலையில், அவர் அடித்த அசாத்திய சிக்ஸர் ஷாட்கள், பெரிய அளவில் கவனம் பெற்றிருந்தது. 50 ஓவர்கள் முடிவில், 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 390 ரன்கள் எடுத்திருந்தது இந்திய அணி.
தொடர்ந்து கடின இலக்கை நோக்கி ஆடிய இலங்கை அணி, 73 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டாக, இந்திய அணி 317 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று வரலாறு படைத்திருந்தது. எந்த அணியும் 300 ரன்கள் வித்தியாசத்தில் ஒரு நாள் போட்டியில் வென்றதில்லை என்ற நிலையில், அதனை மாற்றியமைத்து வரலாறு படைத்துள்ளது இந்திய கிரிக்கெட் அணி.
இந்த நிலையில், கோலி அடித்த சிக்ஸரை பார்த்து விட்டு ரோஹித் கொடுத்த ரியாக்ஷன் தற்போது அதிக கவனம் பெற்று வருகிறது.
கடைசி வரை களத்தில் நின்ற கோலி, 166 ரன்கள் எடுத்து பட்டையை கிளப்பி இருந்தார். அதிலும் அவர் அடித்த சிக்ஸர்கள் ஒவ்வொன்றும் ரசிகர்கள் அனைவரையும் மிரள வைத்திருந்தது. மிகவும் கடினமான பந்துகளை கூட சிக்சருக்கு அடிப்பதில் குறியாக இருந்தார் கோலி. அதிலும் முதல் இன்னிங்சின் கடைசி ஓவரில் இரண்டு சிக்ஸர்கள் அடித்து இந்திய அணி 390 ரன்கள் எட்டவும் உதவி செய்தார் விராட்.
லஹிரு குமாரா வீசிய அந்த ஓவரில், புல் ஷாட் ஒன்றை கோலி சிக்சருக்கு பறக்க விட, அது 95 மீட்டர் தூரம் சென்றிருந்தது. சற்று கடினமான சிக்ஸராகவும் இது அமைந்திருந்த நிலையில், இதனைக் கண்டு இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா வியந்து போனதாகவும் தெரிகிறது. அது மட்டுமில்லாமல், வெளியே இருந்த ரோஹித், கோலியின் சிக்ஸரை பார்த்து விட்டு உற்சாகத்தில் கைத்தட்டவும் செய்திருந்தார்.
Also Read | Nepal Plane Crash : விமான விபத்தில் 72 பேர் பலி.. பயணி எடுத்த லைவ் வீடியோவில் பதிவான திக் திக் நிமிடங்கள்!