88 வருட வரலாற்றில் முதல் முறை.. இந்திய அணியில் இடம்பிடித்த கையோடு.. உனத்கட் படைத்த வரலாற்று சாதனை!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்திய கிரிக்கெட் அணிக்காக டெஸ்ட் போட்டியில், சுமார் 12 ஆண்டுகள் கழித்து மீண்டும் இடம் பிடித்திருந்தார் ஜெய்தேவ் உனத்கட். இத்தனை காலம் கழித்து ஒரு வீரருக்கு அணியில் வாய்ப்பு கிடைத்திருந்தது பெரிய அளவில் பலரையும் வியப்பில் ஆழ்த்தி இருந்தது.
Also Read | காலையில் கண் திறக்காத மனைவி?.. கழுத்தில் முறிந்திருந்த எலும்பு.. விசாரணையில் திடுக்!!
இதற்கு காரணம் அவர் ரஞ்சி உள்ளிட்ட பல உள்ளூர் தொடர்களில் சிறப்பாக விளையாடி பந்து வீசி இருந்தது தான். அப்படி ஒரு சூழலில் தற்போது நடைபெற்று வரும் ரஞ்சி கோப்பை தொடரில் ஜெய்தேவ் உனத்கட் படைத்த வரலாற்று சாதனை பெரிய அளவில் கிரிக்கெட் ரசிகர் மத்தியில் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்திய உள்ளூர் கிரிக்கெட்டில் அதிகம் பிரபலமாக இருக்கும் தொடர்களில் ஒன்று ரஞ்சி கோப்பை தொடர். இந்த தொடர் தற்போது இந்தியாவில் பல்வேறு நகரங்களில் வைத்து நடைபெற்று வருகிறது. இதில், யாஷ் துல் தலைமையிலான டெல்லி அணியும், ஜெய்தேவ் உனத்கட் தலைமையிலான சவுராஷ்டிரா அணியும் மோதி வருகிறது.
இந்த போட்டியில் டெல்லி அணி முதலில் பேட்டிங் செய்ய, 35 ஓவர்களில் 135 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டுகளை இழந்திருந்தது. அதிலும், 10 ரன்களுக்குள் 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி இருந்தது டெல்லி அணி. இதற்கு காரணமாக அமைந்தது சவுராஷ்டிரா அணியின் கேப்டன் ஜெய்தேவ் உனத்கட் பவுலிங் தான். முதல் ஓவரிலேயே ஹாட்ரிக் விக்கெட்டுகளை எடுத்த உனத்கட், தான் வீசிய இரண்டாவது ஓவரில் இன்னும் இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார். மேலும், தான் வீசிய முதல் 3 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை எடுத்து உனத்கட் அசத்த, பல்வேறு சாதனைகளையும் செய்து வரலாறு படைத்துள்ளார்.
அதாவது, 88 ஆண்டு கால ரஞ்சி தொடர் வரலாற்றில் முதல் ஓவரிலேயே ஹாட்ரிக் எடுத்த முதல் வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார் உனத்கட். அது மட்டுமில்லாமல், இந்த இன்னிங்சில் 39 ரன்கள் கொடுத்து 8 விக்கெட்டுகளை கைப்பற்றி உள்ளார். 12 ஆண்டுகள் கழித்து ஒரு வீரருக்கு அணியில் வாய்ப்பு கிடைக்குமா என்ற சூழலில், தொடர்ந்து உள்ளூர் போட்டிகளில் தனது திறனை நிரூபித்து தற்போது இந்திய அணியில் இடம் பிடித்ததுடன் நிப்பாட்டிக் கொள்ளாமல், மீண்டும் ரஞ்சி தொடரில் தான் யார் என்பதை நிரூபித்து வரலாறு படைத்துள்ளார் உனத்கட்.
பல கிரிக்கெட் பிரபலங்கள் தொடங்கி ரசிகர்கள் வரை பலரும் ஜெய்தேவ் உனத்கட் படைத்த வரலாறு சாதனையை பாராட்டி வருகின்றனர்.