"ரெக்கார்ட் உருவாக்குறது தான் எங்க வேலையே".. ஒரு நாள் போட்டியில் முதல் முறை.. வரலாற்றை மாற்றி எழுதி சாதனை படைத்த இந்திய அணி!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் தொடர் தற்போது நடந்து முடிந்துள்ளது. முதலில் நடந்த டி 20 போட்டியை இந்திய அணி 2 - 1 என்ற கணக்கில் கைப்பற்றி இருந்தது.
Also Read | காவலர் குடியிருப்பில் குடும்பத்துடன் பொங்கல் கொண்டாடிய முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி..!
இதற்கடுத்து 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரும் நடந்தது. இதில், முதல் 2 போட்டிகளில் வென்ற இந்திய அணி தொடரை கைப்பற்றி இருந்தது.
இதனைத் தொடர்ந்து, மூன்றாவது ஒரு நாள் போட்டி, நேற்று (15.01.2023) நடைபெற்றிருந்தது. மற்ற இரண்டு ஒரு நாள் போட்டிகளில் இந்திய அணி ஆதிக்கம் செலுத்தி இருந்தது போல, இந்த போட்டியிலும் இந்திய அணி ஆதிக்கம் செலுத்தி இருந்தது.
முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, ஆரம்பத்தில் இருந்தே அதிரடியாக ஆடி ரன்கள் எடுத்தது. தொடக்க வீரர் சுப்மன் கில் 116 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதன் பின்னர், இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி, பட்டையைக் கிளப்பி இருந்தார். முதல் ஒரு நாள் போட்டியில் சதமடித்திருந்த நிலையில், மூன்றாவது ஒரு நாள் போட்டியிலும் சதமடித்திருந்தார்.
அது மட்டுமில்லாமல், 150 ரன்களைக் கடந்த கோலி, 166 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார். 110 பந்துகளில், 13 ஃபோர்கள் மற்றும் 8 சிக்ஸர்களுடன் இந்த ரன்னை கோலி எட்டி இருந்த நிலையில், அவர் அடித்த அசாத்திய சிக்ஸர் ஷாட்கள், பெரிய அளவில் கவனம் பெற்றிருந்தது. 50 ஓவர்கள் முடிவில், 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 390 ரன்கள் எடுத்திருந்ததது இந்திய அணி.
தொடர்ந்து கடின இலக்கை நோக்கி ஆடிய இலங்கை அணி, அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. ஆரம்பத்தில் இந்திய பந்து வீச்சாளர் சிராஜ் விக்கெட்டுகளை சாய்க்க, இதன் பின்னர் 22 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த இலங்கை அணி, 73 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. இதனால், இந்திய அணி 317 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
இந்த வெற்றியின் மூலம் இந்திய கிரிக்கெட் அணி புதிய வரலாறு ஒன்றையும் படைத்துள்ளது. அதாவது, ஒரு நாள் போட்டியில் ஒரு அணி 300 ரன்களுக்கு மேல் வித்தியாசத்தில் வெற்றி பெறுவது என்பது இது தான் முதல் முறை. எந்த அணியும் 300 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதில்லை என்ற சூழலில், தற்போது இந்திய கிரிக்கெட் அணி 317 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசாத்திய சாதனை ஒன்றையும் படைத்துள்ளது.