'எங்கள் அணியின் 'கேம் சேஞ்சர், பெஸ்ட் ஃபினிஷர்' அவர்தான்'... இளம் வீரர் அதிரடி!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Sangeetha | May 10, 2019 02:25 PM
இளம் வீரர்களில் ரிஷப் பந்த்தான், சிறந்த ஃபினிஷர் என்று இளம் வீரரான பிரித்வி ஷா நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

ஐ.பி.எல். தொடரின் இரண்டாவது குவாலிஃபையர் ஆட்டம் இன்று சென்னை - டெல்லி அணிகளுக்கு இடையே நடைபெற உள்ளது. விசாகப்பட்டினத்தில் நடைபெறும் இந்த ஆட்டத்தில் வெற்றிபெறும் அணி, வரும் ஞாயிறு அன்று ஹைதராபாத் மைதானத்தில் மும்பை அணியுடன் இறுதி ஆட்டத்தில் விளையாடும்.
எலிமினேட்டர் ஆட்டத்தில் டெல்லி அணி, ஹைதராபாத் அணியை வீழ்த்தி 2-வது குவாலிஃபையர் ஆட்டத்துக்கு முன்னேறியது. இந்தப் போட்டியில், ப்ரித்வி ஷா மற்றும் ரிஷப் பந்த் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இந்நிலையில், கடந்த ஆட்டம் குறித்துப் பேசிய டெல்லி அணியின் தொடக்க ஆட்டக்காரரான ப்ரித்வி ஷா, 'டி20 லீக் போட்டிகள் எப்போதும் அழுத்தம் அதிகம் கொண்டவை. கடந்த போட்டியில் வெற்றிபெற வேண்டும் என நான் பிரார்த்தனை செய்துகொண்டிருந்தேன்.
டி20 லீக் ஆட்டத்தில், முதல் 6 ஓவர்கள் மிக முக்கியமானது. அதில், தொடக்க ஆட்டக்காரர்கள் ரன்கள் குவித்துவிட்டால், அடுத்து வரும் பேட்ஸ்மேன்களின் பிரஷர் குறையும். பந்துவீச்சாளர்களின் மோசமான பந்துகளுக்காகக் காத்திருந்து ஆட வேண்டும். பந்த் சிறப்பாக விளையாடினார். தற்போது இருக்கும் இளம் வீரர்களில் அவர் ஒரு சிறந்த ஃபினிஷர். போட்டியில் வெற்றிக்கான வாய்ப்புகளை எப்போதும் எங்களுக்கு உருவாக்கித் தருபவர். ஆனால், கடந்த ஒரு போட்டியில் அவரால் எங்களுக்கு சரியாக முடித்துத் தர முடியவில்லை' என்றார்.
இதுவரை ப்ளே ஆஃப் சுற்றுப் போட்டிகளில் டெல்லி அணி வெற்றிபெற்றது கிடையாது. இன்றைய போட்டியில், சென்னை அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்த மோசமான சாதனைக்கு முற்றுப்புள்ளி வைக்குமா அல்லது சென்னை அணி மீண்டும் ஒருமுறை ஃபைனலுக்கு முன்னேறுமா என்பதை இன்று நடைபெறும் ஆட்டம் முடிவு செய்திவிடும்.
